எல். முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
எல். முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : டிச 05, 2024 07:27 PM

புதுடில்லி: மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த போது, கடந்த 2020ல் வேலுாரில் நடந்த கூட்டத்தில், 'சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம்' என மத்திய இணை அமைச்சரான முருகன் பேசியிருந்தார்.
இந்த விவகாரத்தில் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட குற்றவியல் அவதுாறு வழக்கு, சென்னை எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு, கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் யாரையும் அவதுாறு செய்யும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்த முருகன் தயாராக இருப்பதை, முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் எடுத்துஉரைத்தனர். பின்னர், வழக்கு விசாரணையை இன்றைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது முருகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பரமேஸ்வர், ' அறக்கட்டளையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் முருகனுக்கு இல்லை. அரசியல் கட்சியின் தலைவராக இருந்த போது இந்த கருத்தை தெரிவித்தாரே தவிர, களங்கம் ஏற்படுத்துவதற்காக கூறவில்லை,' என விளக்கம் கொடுத்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.
இதனையடுத்து முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர், அறக்கட்டளைக்கு அவப்பெயர் அல்லது களங்கம் ஏற்படுத்துவதற்கு எந்த நோக்கமும் இல்லை என முருகன் தெளிவுபடுத்தியதால், இந்த வழக்கை தொடர விரும்பவில்லை எனக்கூறினர்.
இதன் பிறகு நீதிபதிகள், முருகனின் விளக்கத்தை ஏற்று அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.