ADDED : ஜன 30, 2024 02:31 AM

கொச்சி: நாட்டில் முதன்முறையாக, ஆய்வுக்கூடத்தில் வைத்து மீன் இறைச்சியை தயாரிக்கும் முயற்சியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மீன் இறைச்சிக்கான தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்யவும், கடல் வளங்கள் மீதான அதிகப்படியான அழுத்தத்தை தணிக்கவும், ஆய்வுக்கூடங்களில் மீன் இறைச்சி தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மீன் இறைச்சி, குறிப்பிட்ட செல்களை மீனில் இருந்து தனிமைப்படுத்தி, விலங்கு கூறுகள் இல்லாமல், ஆய்வக அமைப்பில் வளர்ப்பதன் வாயிலாக உருவாக்கப்படுகிறது.
இதன் இறுதி வடிவம், மீனின் அசல் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து குணங்களை உடையதாக இருக்கும். இது போன்ற முயற்சி நாட்டில் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, தேசிய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'நீட் மீட் பயோடெக்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.