ஸ்கேன் சேவைக்கு நிதி பற்றாக்குறையா? சுகாதார அமைச்சர் திட்டவட்ட மறுப்பு!
ஸ்கேன் சேவைக்கு நிதி பற்றாக்குறையா? சுகாதார அமைச்சர் திட்டவட்ட மறுப்பு!
ADDED : செப் 27, 2024 08:08 AM

பெங்களூரு; 'சிடி மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' சேவைக்கு, நிதி பற்றக்குறை இல்லை. இதற்கு 63.49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில், 'சிடி' மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவைக்கு நிதி பற்றாக்குறை உள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இது அபத்தமான குற்றச்சாட்டாகும், ஸ்கேன் சேவைககாக 63.49 கோடி ரூபாய் நிதி, சுகாதாரத் துறையிடம் உள்ளது. நிதி பற்றாக்குறை ஏதும் இல்லை.
மாநிலத்தில் மூன்று நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளில் சிடி மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை வழங்குகின்றன. இவற்றில் கிருஷ்ணா டயாக்னஸ்டிக் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தாக்கல் செய்த பில் தொகை ஆவணங்களில், தேவையான தகவல் இல்லை. இது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். ஜூன், ஜூலை என, இரு மாதம் மட்டுமே பில் தொகை வழங்குவது தாமதமானது. மற்ற நிறுவனங்களுக்கு பில் தொகை பாக்கி இல்லை.
சுகாதார துறை கேட்டுள்ள தகவல்களை, கிருஷ்ணா நிறுவனம் அளித்தவுடன், பில் தொகை வழங்கப்படும். இந்நிறுவனத்தின் சார்பில் சிடி மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை வழங்கும் மருத்துவமனைகளில், நோயாளிகளின் சிகிச்சைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
அரசு பணம் என்றால், மக்களின் பணமாகும். இதை தவறாக பயன்படுத்த வாய்ப்பளிக்க மாட்டோம். பா.ஜ., அரசில் நடந்தது போன்று, எந்த தனியார் நிறுவனமும், எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது.
தற்போதைய அரசு, மாநில மக்களுக்காக செயல்படுத்திய வாக்குறுதி திட்டங்களால், மாநில கருவூலத்தில் பணம் இல்லை என்ற பொய்யை பரப்புவதே பா.ஜ.,வின் வேலை. ஒரு செய்தியின் பின்னணியில் உள்ள உண்மைகளை தெரிந்து கொள்ளாமல், பொய்யான தகவங்களை பரப்புவது, பா.ஜ., தலைவர்களுக்கு புதிதல்ல.
சிடி மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, பில் தொகை வழங்கவில்லை. கருவூலம் காலியாகி விட்டது என, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் பா.ஜ., தலைவர்களுக்கு, அந்நிறுவனத்துக்கு ஏன் பில் தொகை வழங்கவில்லை என, ஆராயாதது பெரும் துரதிர்ஷ்டவசமாகும்.
மாநிலத்தில் ஸ்கேன் சேவைக்கு தேவையான நிதி இருப்புள்ளது. அந்நிறுவனம் அளித்த ஆவணங்களில் குளறுபடி உள்ளது. இதனால் பில் தொகை வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

