லடாக் வன்முறை எதிரொலி சமூக ஆர்வலருக்கு 'கிடுக்கி'
லடாக் வன்முறை எதிரொலி சமூக ஆர்வலருக்கு 'கிடுக்கி'
ADDED : செப் 26, 2025 12:48 AM

லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக்கின் தொண்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், 'செக்மோல்' என்ற பெயரில், லடாக்கின் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு பல வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்படுகிறது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி இவர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவங்களுக்கு வாங்சூக் தான் காரணம் என மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. அவரது தொண்டு நிறுவனத்துக்காக வெளிநாட்டு நன்கொடைகள் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, வாங்சூக் நிறுவனத்துக்கான பதிவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இந்த நிறுவனத்துக்காக வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறப்படுவதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., விசாரணையை துவங்கிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வாங்சூக் கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் சென்று வந்ததது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.