யூடியூப் செய்யும் மாயம்; லாரி டிரைவருக்கு லட்சங்களில் கொட்டுது வருமானம்!
யூடியூப் செய்யும் மாயம்; லாரி டிரைவருக்கு லட்சங்களில் கொட்டுது வருமானம்!
UPDATED : ஆக 19, 2024 09:03 AM
ADDED : ஆக 19, 2024 08:10 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் லாரி டிரைவர் ஒருவர் சமையல் வீடியோக்களின் மூலம் யூடியூபில் மாதமாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டிரைவர் டூ யூடியூபர்
ராஜேஷ் ரவானி என்பவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் லாரியில் செல்லும் இவர், ஆர்.ராஜேஷ் விலாக்ஸ் ( R Rajesh Vlogs) எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், தான் சமையல் செய்வதை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வந்துள்ளார்.
ஒரே நாளில்
முதலில் ஒலிப்பதிவுடன் கூடிய வீடியோக்களை மட்டும் ராஜேஷ் ரவானி பகிர்ந்து வந்துள்ளார். பின்னர், அவரது முகத்தை காண்பிக்குமாறு பார்வையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனையேற்று, தனது மகனின் உதவியுடன், முகத்தை காட்டி, வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அப்படி போட்ட முதல் வீடியோ ஒரே நாளில் 4.5 லட்சம் பார்வைகளை எட்டியது.
10 லட்சம் வருமானம்
லாரி ஓட்டுவதை செய்து கொண்டே யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவரது சேனலை 10 லட்சத்து 86 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன்மூலம், மாதம் 4.5 முதல் 5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவதாகவும், அதிகபட்சமாக ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் ஈட்டியதாக ராஜேஷ் ரவானி தெரிவித்துள்ளார்.
முன்னுதாரணம்
விபத்தில் கையில் காயம் ஏற்பட்ட போதும், ஓய்வெடுக்க முடியாமல், வேலை செய்தால் மட்டுமே தனது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று பணிக்கு சென்ற ராஜேஷ் ரவானி, தற்போது யூடியூப் வருமானத்தின் மூலம் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்.

