பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பதிலாக சர்க்கரை கிராம பஞ்சாயத்தால் அழகாக மாறும் லக்குன்டி
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பதிலாக சர்க்கரை கிராம பஞ்சாயத்தால் அழகாக மாறும் லக்குன்டி
ADDED : நவ 23, 2024 11:01 PM

வரலாற்று பிரசித்தி பெற்ற, லக்குன்டி கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்ற, கிராம பஞ்சாயத்து நுாதன யுக்தியை கையாள்கிறது. இது வெற்றி அடைந்துள்ளது.
பெங்களூரு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக், தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் எளிதில் கரைவது இல்லை. பல ஆண்டுகள் அப்படியே இருக்கும். இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, விஞ்ஞானிகள் பல முறை எச்சரித்துள்ளனர்.
உள்ளாட்சிகள் தோல்வி
பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால், கால்நடைகளுக்கு அபாயம் ஏற்படுகிறது. மாநில அரசும் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்தும், பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் குவிந்து கிடப்பதை காண முடிகிறது.
பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என, அரசு பிறப்பித்த உத்தரவு, வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. இன்றைக்கும் தரமற்ற பிளாஸ்டிக் கவர்கள், பொருட்கள் விற்பதை அரசால் தடுக்க முடியவில்லை. உள்ளாட்சிகளும் கூட, இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதற்கிடையே லக்குன்டி கிராம பஞ்சாயத்து, பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த புதிய வழிமுறையை கையாள்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கதக்கின் லக்குன்டி கிராமம் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். கதக் நகரில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது. கிராமத்தில் புராதன கோவில் உள்ளது.
ரூ.5 கோடி
ஒரு காலத்தில் லக்குன்டி கிராமத்தில், 101 புராதன கோவில்கள், 101 ஏரிகள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் இவை சீர்குலைந்தன.
ஆனால் தற்போது சில கோவில்கள், ஏரிகள் மட்டுமே உள்ளன. கிராமத்தை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க, கிராம பஞ்சாயத்து திட்டமிட்டுள்ளது.
இதற்காக 5.66 கோடி ரூபாய் செலவிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை கண்ட, கண்ட இடங்களில் போட்டு, சுற்றுச்சூழலை அசுத்தமாக்குவதை தவிர்க்க, பிளாஸ்டிக் பொருட்களை, தானே சேகரிக்கிறது.
மக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளை பெற்று கொண்டு, அதற்கு பதிலாக சர்க்கரை கொடுக்கிறது. இரண்டு கிலோ பிளாஸ்டிக்குக்கு, இரண்டு கிலோ சர்க்கரை; 10 கிலோ பிளாஸ்டிக்குக்கு 10 கிலோ சர்க்கரை கொடுக்கிறது.
இந்த திட்டத்துக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் பிளாஸ்டிக்கை கீழே வீசாமல், கிராம பஞ்சாயத்திடம் கொடுத்து, சர்க்கரை பெறுகின்றனர்.
கிராம பஞ்சாயத்தின் இத்தகைய நடவடிக்கையால், தற்போது கிராமம் சுத்தமாக காணப்படுகிறது. பஞ்சாயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது.
விழிப்புணர்வு
கிராம பஞ்சாயத்து தலைவர் பூஜார் கூறியதாவது:
எங்களின் முயற்சியால், லக்குன்டி கிராமம் அழகாக தென்படுகிறது. இதற்கு முன்பு, பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக காகித பை, துணிப்பை பயன்படுத்துவது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆனால் மக்கள் பொருட்படுத்தவில்லை.
இப்போது பிளாஸ்டிக்குக்கு பதிலாக, சர்க்கரை தருவதால் மக்கள் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை, கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கின்றனர். மொத்தமாக ஒரே இடத்தில் பிளாஸ்டிக் சேர்வதால், அவற்றை அழிப்பதும் எளிதாக இருக்கும். கிராமமும் சுத்தமாக, அழகாக தென்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.