டில்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி; லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் மூடல்
டில்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி; லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் மூடல்
ADDED : நவ 11, 2025 08:46 PM

புதுடில்லி; பாதுகாப்பு காரணங்களுக்காக டில்லி லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் நவ.12 வரை மூடப்படுகிறது.
டில்லி செங்கோட்டை அருகே உள்ள லால் குயிலா மெட்ரோ ரயில் நிலைய முதலாம் வாயில் அருகே நேற்று மாலை கார் குண்டு வெடித்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயம் அடைந்தனர்.
தலைநகரில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மக்களின் உடமைகள், வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சந்தேக நபர்கள் யாரேனும் இருந்தால் உடனே தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இந் நிலையில் உயர்பாதுகாப்பு கருதி டில்லி செங்கோட்டை அருகே உள்ள லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் நவ.12ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

