'கடத்தல்காரர்களின் கூட்டாளி லாலு பிரசாத்': மைத்துனரின் புகாரால் பீஹாரில் பரபரப்பு
'கடத்தல்காரர்களின் கூட்டாளி லாலு பிரசாத்': மைத்துனரின் புகாரால் பீஹாரில் பரபரப்பு
ADDED : பிப் 14, 2025 11:35 PM

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை, கடத்தல்காரர்களின் கூட்டாளி என, அவரது மைத்துனர் சுபாஷ் யாதவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் பீஹாரில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீது, அவரது சொந்த மைத்துனரான சுபாஷ் யாதவ் பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்திஉள்ளார்.
பாட்னாவில் நேற்று அவர் கூறியதாவது:
ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியின் போது கடத்தல்காரர்கள், ரவுடிகளுடன் நேரடி தொடர்பை லாலு பிரசாத் வைத்திருந்தார். 2001ல் அப்போதைய நிதியமைச்சர் சங்கர் பிரசாத் தெக்ரிவாலின் உறவினர் கடத்தப்பட்டதிலும், அவருக்கு தொடர்பு உண்டு. லாலு பிரசாத்தின் நெருங்கிய உதவியாளர் பிரேம் சந்த் குப்தாதான், இந்த பேரத்தை முன்னின்று முடித்தார். இந்த விவகாரத்தில், அமைச்சர் பதவியை சங்கர் பிரசாத் ராஜினாமா செய்தார்.
ஆள் கடத்தல் ரவுடிகளுக்கு ஆதரவாக லாலு பிரசாத் செயல்பட்டார். 1999ல் லாலுவின் மகளும், தற்போதைய லோக்சபா எம்.பி.,யுமான மிசா பாரதியின் திருமணத்துக்காக, கார் ஷோரூம் ஒன்றில் இருந்து ஏராளமான கார்களை திருடினர்.
அதில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு. இதில், எனக்கு தொடர்பு இருந்திருந்தால், கால்நடை தீவன ஊழலில் ஆதாரங்கள் இருந்ததால், லாலு பிரசாத் சிறை சென்றது போல நானும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.