ADDED : மார் 11, 2024 03:41 AM
புதுடில்லி : மணல் கொள்ளை வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளரான சுபாஷ் யாதவ், 'பிராட்சன் கம்மோடிட்டீஸ்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த நிறுவனம் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு, அதை விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
சுபாஷின் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், உரிய அனுமதியின்றி மணல் விற்பனை செய்து லாபம் ஈட்டியதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில், பணமோசடி நடந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சட்டவிரோத மணல் விற்பனையால், அந்த நிறுவனம், 161 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, அதன் நிர்வாக இயக்குனர் சுபாஷ் யாதவ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுபாஷின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான எட்டு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
பல்வேறு குழுக்களாக அதிகாரிகள் பிரிந்து, 14 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய சோதனையில், 2.3 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் முடிவில், சுபாஷ் யாதவை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள சட்டமேலவை உறுப்பினர் ராதா சரண் ஷா மற்றும் அவரின் மகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

