இரவோடு இரவாக அரசு பங்களாவை காலி செய்த லாலு மனைவி ரப்ரி தேவி
இரவோடு இரவாக அரசு பங்களாவை காலி செய்த லாலு மனைவி ரப்ரி தேவி
ADDED : டிச 27, 2025 12:21 AM

பாட்னா: பீஹாரில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அதிகார மையமாக, 20 ஆண்டுகளாக விளங்கிய பாட்னாவின், 10 சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவை, அக்கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி இரவோடு இரவாக காலி செய்தார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
லாலுவின் மனைவி ரப்ரி தேவி, 1997 - 2005 வரை முதல்வராக பதவி வகித்தார். 2005ல் ஆட்சியை இழந்ததும், பாட்னாவின், 1 அனே மார்க்கில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் காலி செய்து, அதன் அருகே, 10 சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறினார்.
ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும், 20 ஆண்டுகளாக இந்த பங்களாவில் தான் லாலு பிரசாத் குடும்பத்தினர் வசித்தனர். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அதிகார மையமாக, சொல்லப் போனால் அக்கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற தலைமை அலுவலகமாக இந்த பங்களா செயல்பட்டது.
'முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா வழங்கக்கூடாது' என்ற பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு, 10 சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி ரப்ரி தேவிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதே சமயம், சட்ட மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், 39 ஹார்டிங் சாலையில் அவருக்கு வேறொரு பங்களாவை ஒதுக்கியது. அரசு உத்தரவை தொடர்ந்து, 20 ஆண்டுகளாக வசித்த, 10 சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவை இரவோடு இரவாக ரப்ரி தேவி காலி செய்தார்.
பல்வேறு வாகனங்களில் அந்த பங்களாவில் இருந்து நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. ஆனால், அவை எந்த இடத்துக்கு எடுத்து செல்லப்பட்டன என்பது தெரியவில்லை.

