கார்கே குடும்பத்திற்கு நிலம்; மேல்சபையில் கடும் வாக்குவாதம்
கார்கே குடும்பத்திற்கு நிலம்; மேல்சபையில் கடும் வாக்குவாதம்
ADDED : டிச 17, 2024 11:45 PM
பெலகாவி; காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் குடும்ப அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக, மேல்சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடக மேல்சபையில் கேள்வி நேரத்தின்போது பா.ஜ. உறுப்பினர் ரவி பேசியது:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்திற்கு சொந்தமான சித்தார்த்த விகார் அறக்கட்டளைக்கு, கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் 5 ஏக்கர் நிலத்தை எந்த அடிப்படையில் அரசு ஒதுக்கியது?
நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக எந்த நாளிதழில் விளம்பரம் செய்தீர்கள்? அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பள்ளி, சமுதாய கட்டடம், மருத்துவமனை கட்ட வேண்டும்.
ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு, ஹோட்டல் கட்டினால் அது வணிக ரீதியானது. இவை அனைத்தும் தொழில்துறை மண்டலத்தின் வரம்பிற்குள் வருமா?
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு தொழில்துறை அமைச்சர் எம்.பி., பாட்டீல் பதில் அளித்து பேசுகையில், “நில ஒதுக்கீடு தொடர்பான விதிகளை எங்களது அரசு உருவாக்கவில்லை.
முந்தைய அரசுதான் விதிகளை உருவாக்கியது. தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் வெளி ஆட்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது,” என்றார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சலுவாதி நாராயணசாமி, ம.ஜ.த., உறுப்பினர் போஜேகவுடா எதிர்ப்புத் தெரிவித்தனர். பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பதில் அளிப்பதாக கூறினர்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் நீடித்தது.
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார்.
“அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என்றால், அது குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு கடிதம் கொடுங்கள். இப்போது சபையை நடத்த அனுமதியுங்கள்,” என்றார் பசவராஜ் ஹொரட்டி. பின், சபை தொடர்ந்து நடந்தது.