வேலைக்கு நிலம் லஞ்ச வழக்கு : தேஜஸ்வியிடம் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி
வேலைக்கு நிலம் லஞ்ச வழக்கு : தேஜஸ்வியிடம் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி
ADDED : ஜன 30, 2024 10:58 PM

பாட்னா : ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004- 2009 வரையிலான கால கட்டத்தில், மத்தியில், காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக இருந்தார்.
அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அதற்கு பிரதிபலனாக குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம், பாட்னாவில் உள்ளஅமலாக்கத் துறை அலுவலகத்தில், லாலு பிரசாத் யாதவ் ஆஜரானார். அவரிடம், ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆஜரானார்.
அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு, அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வருமான வரித்துறை, சி.பி.ஐ., - அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை, மத்திய பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் குற்றம் சாட்டி உள்ளது.