கொச்சி--தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் மண்சரிவு கணவர் பலி, மனைவி காயம்; 22 குடும்பத்தினர் மாற்று இடத்திற்கு சென்றதால் தப்பினர்
கொச்சி--தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் மண்சரிவு கணவர் பலி, மனைவி காயம்; 22 குடும்பத்தினர் மாற்று இடத்திற்கு சென்றதால் தப்பினர்
ADDED : அக் 27, 2025 12:45 AM

மூணாறு: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே கூம்பன்பாறை லட்சம் வீடு காலனி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் கணவர் பலியான நிலையில் மனைவி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். 22 குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி மாற்று இடத்திற்கு சென்றதால் தப்பினர்.
மூணாறு - கொச்சி இடையே 126 கி.மீ., துாரம் ரோடு விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. அதனால் மண் எடுக்கப்பட்ட பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் அக்., 24ல் மண் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் மீண்டும் மண் சரிவு அபாயம் நிலவியதால் அங்கு வசித்த 22 குடும்பங்கள் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் அரசு பள்ளி நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
ஒருவர் பலி இந்நிலையில் லட்சம் வீடு காலனியைச் சேர்ந்த பிஜூ 47. அவரது மனைவி சந்தியா 41, ஆகியோர் உணவு அருந்தவும், ஒரு சில முக்கிய ஆவணங்களை எடுத்து வரவும் முகாமில் இருந்து வீட்டிற்குச்சென்றனர். அப்போது எதிர்பாராத வகையில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சிறிய அளவிலும், ஆறு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. அதில் முற்றிலுமாக சேதமடைந்த வீட்டினுள் பிஜூ, சந்தியா ஆகியோர் சிக்கினர். அடிமாலி தீயணைப்புத்துறையினர் பொது மக்கள் உதவியுடன் ஆறு மணி நேரம் போராடி இறந்த பிஜூவின் உடலை மீட்டனர். பலத்த காயம் அடைந்த நிலையில் சந்தியா மீட்கப்பட்டு, எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின், இடுக்கி எம்.பி., டீன் குரியாகோஸ், கலெக்டர் தினேசன் செருவாட் ஆகியோர் சம்பவயிடத்தை பார்வையிட்டனர்.
நிவாரண முகாம் அமைக்கப்பட்ட பள்ளி இன்று திறக்கப்படும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் நடந்தது. அதில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் 44 குடும்பங்களை கத்திப்பாறை பகுதியில் உள்ள அரசு குடியிருப்புகளிலும், அடிமாலி மச்சி பிளாவ் பகுதியில்
தொடர்ச்சி ௭ம் பக்கம்
உள்ள அரசு தொகுப்பு வீடுகளிலும் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதேபோல் உள்ளாட்சி, புவியியல், பேரிடர் மேலாண்மை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளை கொண்ட சிறப்பு குழு அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அறிவியல் ரீதியாக ஆய்வு நடத்தவும், அதன்படி கட்டுமான பணிகள் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
கலெக்டர் உத்தரவு : ''இடுக்கி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உட்பட மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்,'' என, கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டார். சிறப்பு குழுவின் ஆய்வு அறிக்கைக்கு பின் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர்ப்பு: மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முன்கூட்டியே 22 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலியில் இருந்து மூணாறுக்கு வரும் வழியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் அடிமாலியில் இருந்து கல்லார்குட்டி, வெள்ளத்துாவல் வழியாக மூணாறுக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

