ADDED : மார் 02, 2024 10:33 PM

பெங்களூரின் லால்பாக் பூங்காவில் யானைகள் கூட்டம், கூட்டமாக குவிந்துள்ளன. பெரியவர்கள் மட்டுமல்ல, சிறு குழந்தைகளும் பயமின்றி, யானைகளின் தும்பிக்கையை பிடித்து விளையாடலாம். பக்கத்தில் நின்று 'செல்பி' எடுக்கலாம்.
ஆரவாரம் செய்து மகிழலாம். மக்களின் கூச்சலை கேட்டு, இந்த யானைகள் ஓடாது. விரட்டி வந்து மிரட்டவும் செய்யாது. ஆச்சர்யம் ஏற்படுகிறதா? இவை உண்மையான யானைகள் அல்ல. லன்டானா யானைகள்.
பெங்களூரு விதான்சவுதா, கெம்பே கவுடா மெட்ரோ ரயில் நிலையம், எம்.ஜி., சாலை மெட்ரோ நிலையம் உட்பட பெங்களூரின் பல்வேறு இடங்களில், 'லன்டானா யானைகள்' பரவலாக தென்படுகின்றன.
மனிதர்கள், விலங்குகளுக்கு இடையே மோதல் ஏற்படாமல், ஒருங்கிணைந்து வாழ்வதை கற்றுத்தரும் நோக்கில், இந்த யானைகள் வந்துள்ளன.
அலங்கார செடி
லன்டானா என்பது ஒரு வகையான தாவரம். கர்நாடகா, தமிழகம், கேரளா மாநிலங்களின் வனப்பகுதிகளில் லன்டானா அதிகமாக விளைகிறது.
இது விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்த இந்த அலங்கார செடியாக, இந்தியாவில் நுழைந்து, தற்போது நாட்டின் வனப்பகுதிக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது.
லன்டானா விளையும் பகுதிகளில் புற்கள், மூங்கில் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மான், யானைகள் போன்ற சைவ விலங்குகளின் உணவுக்கும் இடையூறாக உள்ளது. லன்டானா புதர்களை போன்று வளர்கின்றன.
இதன் பின்னால் யானை, சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகள் இருப்பது, மனிதர்களின் கண்களுக்கு தெரியாது. திடீரென மனிதரை கண்டால் தாக்குகின்றன. இதே காரணத்தால் உயிரிழப்பு நடந்த உதாரணங்களும் உள்ளன.
வெளிநாட்டில் இருந்து வந்த, இந்த 'களை'யை அழிக்கும் நோக்கில் 'கலை' வடிவமாக மாற்றி உள்ளனர்.
அரசு சாரா அமைப்பு 'ரியல் எலிபன்ட் கலெக்டிவ்' மற்றும் பிரிட்டனின் 'எலிபென்ட் பேமிலி' ஒருங்கிணைப்பில், தமிழகத்தின், கூடலுாரின் ஷோலா டிரஸ்ட் லன்டானாவை பயன்படுத்தி, யானை உருவங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த டிரஸ்ட் சார்பில் பழங்குடியினருக்கு லன்டானா யானைகள் தயாரிப்பது குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.
வன விலங்குகள் அபாயத்தை ஏற்படுத்திய, வனத்துறையினருக்கு தலைவலியாக உள்ள லன்டானா, கர்நாடகா, தமிழகம், கேரளாவில் சோலிகர், மலை குறவர்கள், தேன் குருபர்கள், பனியன் பழங்குடியின மக்களின் கை வண்ணத்தால், யானைகளாக மாறி கலை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
பழங்குடியினர் லன்டானா பயன்படுத்தி, யானைகள் மட்டுமின்றி, நாற்காலி, இருக்கைகள், மேஜை, சோபா, திவான் உட்பட பல பொருட்களை தயாரிக்கின்றனர்.
வேலைவாய்ப்பு
வனத்தில் லன்டானா பரவுவதை தடுக்க, வனத்துறைக்கு புதிய வழி கிடைத்தது. அது மட்டுமின்றி பழங்குடியின குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
பிழைப்பு தேடி புலம் பெயர வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, பல விதமான கலை வடிவங்களை உருவாக்குகின்றனர். மூன்று மாநிலங்களின் பழங்குடியினர், இதையே தொழிலாக செய்து கை நிறைய பணம் சம்பாதிக்கின்றனர். 300க்கும் மேற்பட்ட யானைகள் தயாரித்துள்ளனர்.
வனம் மற்றும் வன விலங்குகளுடன், பிரிக்க முடியாத பந்தம் வைத்துள்ள இவர்கள், நிஜ யானைகளை தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். இத்தகைய லன்டானா யானைகள், பெங்களூரின் லால்பாக் பூங்கா, விதான்சவுதா, கெம்பேகவுடா மெட்ரோ நிலையம், எம்.ஜி.சாலை மெட்ரோ நிலையம் என, பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அதிநவீனம், நகர் மயத்தில் ஆர்வம் நமக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதர், விலங்குகள் ஒருங்கிணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன.
பெரிய யானை ரூ.65,000
பிலிகிரிரங்கநாத மலையில் வசிக்கும் சோலிக சமுதாயத்தை சேர்ந்த பாப்பண்ணா கூறியதாவது:
நாங்கள், 25 ஆண்டுகளாக, லன்டானா பயன்படுத்தி, பல விதமான கைவினை பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளாக, யானைகள் வடிவங்களை தயாரிக்கிறோம். ரியல் எலிபென்ட் அமைப்பினர், யானைகள் அளவு அடிப்படையில் பணம் கொடுக்கின்றனர். பெரிய அளவில் உள்ள யானைக்கு 65,000 ரூபாய் கிடைக்கிறது.
வனத்துக்கு சென்று, லன்டானா செடிகளை வெட்டிக் கொண்டு வந்து, பெரிய வாணலியில் போட்டு ஐந்து மணி நேரம், வென்னீரில் வேக வைக்கப்படுகிறது. அதன்பின் லன்டானா மீதுள்ள தோல் அகற்றப்படும். வேக வைப்பதால், லன்டானாவை எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாழாகாது.
யானை உருவத்தின் நீளம், அகலத்துக்கு தக்கபடி, இரும்பால் உருவம் தயாரிக்கப்படும். இதன் வெளிப்புறத்தில் லன்டானா பயன்படுத்தி, கலை வடிவம் அளிக்கப்படும். இதற்கு வார்னிஷ் தவிர, வேறு எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

