UPDATED : டிச 24, 2024 05:15 PM
ADDED : டிச 24, 2024 10:17 AM

புதுடில்லி: கேல் ரத்னா விருதுக்கான விண்ணப்ப மனுவில் எனது தரப்பில் தவறு நடந்து இருக்கலாம்,'' என ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் கூறியுள்ளார்.
பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் வென்றது. மொத்தம் பெற்ற 6 பதக்கங்களில் 2 பதக்கங்களை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் பெற்று தந்தார். அவர் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர்பிஸ்டர் பிரிவில் முதல் வெண்கல பதக்கத்தை அள்ளினார். கலப்பு இரட்டையர் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் வெண்கலமும் வென்றார். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்ளை வென்ற இந்தியர் என்ற சாதனையையும் மனு பாகர் படைத்தார்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மனு பாகர் பெயர் இடம்பெற வில்லை. இது அவருக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. மனு பாகர் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் கூற, அதை பாகரின் குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் நான் பதக்கம் ஜெயித்திருக்கவே கூடாது என்று மனு பாகர் மனம் வெறுத்து கூறியதாக அவரது தந்தை ராம்கிஷன் பாகர் வேதனையுடன் கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றார். யாரும் அதைச் செய்ததில்லை. இதைவிட என் மகள் நாட்டுக்காக வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அவரது முயற்சியை அரசு அங்கீகரிக்க வேண்டும்.
நான் மனுவிடம் பேசினேன். அவர் இதையெல்லாம் கண்டு மனம் உடைந்தாள். என்னிடம், 'நான் ஒலிம்பிக்கிற்குச் சென்று நாட்டிற்காக பதக்கங்களை வென்றிருக்கவே கூடாது. உண்மையில், நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஆகியிருக்கக் கூடாது என்று பேசினார். இவ்வாறு மனு பாகர் தந்தை தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மனுபாகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஒரு விளையாட்டு வீரராக நாட்டிற்காக விளையாடுவதும், செயல்படுவதும் எனது பங்கு. விருதுகள் மற்றும் அங்கீகாரம் என்னை உந்துதலாக வைத்துள்ளது. ஆனால், என் குறிக்கோள் அது அல்ல.
விண்ணப்ப மனுவில் என் தரப்பில் தவறு நடந்து இருக்கலாம் என நம்புகிறேன். அது சரி செய்யப்பட்டு வருகிறது. விருதை பொருட்படுத்தாமல், நாட்டிற்காக அதிக விருதுகள் பெறுவதற்கு முயற்சிப்பேன். இந்த விஷயத்தில் எதையும் யூகமாக வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மனு பாகர் கூறியுள்ளார்.