பயங்கரவாத சதி வழக்கு: ருவாண்டாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி
பயங்கரவாத சதி வழக்கு: ருவாண்டாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி
UPDATED : நவ 28, 2024 03:26 PM
ADDED : நவ 28, 2024 03:21 PM

பெங்களூரு: பெங்களூரு சிறையில் இருந்தபடி பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை திரட்டிய வழக்கில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை ருவாண்டா அரசு, இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.
சல்மான் ரெஹ்மான் கானி என்பவன், போக்சோ வழக்கில் கைதாகி 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது, சிறையில் இருந்த மற்றொரு பயங்கரவாதி நசீர் என்பவன் தொடர்பு கிடைத்தது. அப்போது சல்மானை பயங்கரவாதியாக மாற்றிய நசீர், சிறையில் இருந்தே, பயங்கரவாத திட்டங்களுக்கு இருவரும் சதி திட்டம் தீட்டினர். இதனுடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சல்மான், ஆயுதங்கள், வெடிபொருட்கள் திரட்டியதுடன், ஆட்களை திரட்டினான். நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நசீர் அங்கிருந்து தப்பிச் சென்றான். இதற்கு சல்மான் உதவி செய்தான்.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாத சதி அம்பலமானது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கினர். அதற்குள் சல்மான் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றான். இதனையடுத்து 2023 அக்., 25 பெங்களூருவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். சல்மானை தப்பிச்சென்றவனாக அறிவித்த அதிகாரிகள் அவன் மீது யுஏபிஏ, ஆயுதங்கள் சட்டம், வெடிமருந்துகள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கடந்த ஆக.,2 ம் தேதி அவனுக்கு எதிராக இண்டர்போல் போலீசார் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஆப்பிரிக்க நாடான ருவாண்டா தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சேர்ந்து கிகாலி நகரில் இருந்த சல்மானை கைது செய்தனர். இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவனை இன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.