அமேதி, ரேபரேலிக்கான கடைசி நேர வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரசின் தாமதம்... மோசமான சமிக்ஞை
அமேதி, ரேபரேலிக்கான கடைசி நேர வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரசின் தாமதம்... மோசமான சமிக்ஞை
ADDED : மே 03, 2024 05:25 AM

உத்தர பிரதேச மாநிலம் அமேதியிலும், ரேபரேலியிலும் கடைசி நாளன்று வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில், காங்கிரஸ் தன் வேட்பாளர்களை அறிவிப்பது மோசமான ஒரு சமிக்ஞை என்றே சொல்ல வேண்டும். ராஜதந்திர ரீதியாக ஏதோ வியூகம் அமைப்பதாக எண்ணி, கடைசியில் காங்கிரஸ் தன்னைச் சுற்றியே ஒரு வலையைப் பின்னி கொண்டுஇருப்பது போல தான் இது காட்சி அளிக்கிறது.
எதிர்கொள்ளும் சவால்
லோக்சபாவுக்கான, 543 தொகுதிகளில் பா.ஜ., இம்முறை 413 இடங்களில் போட்டியிடுகிறது; காங்கிரஸ் 294ல் போட்டியிடுகிறது. இதில் சரிபாதி இடங்களில் வென்றால்கூட காங்கிரஸ் 150 இடங்களைத் தொடுவது சிரமம். இதில் பெரும்பாலான தொகுதிகளில் அது பா.ஜ.,வை நேரடியாக எதிர்கொள்கிறது.
கடந்த 2019 தேர்தலில் இரு கட்சிகளும் முதல் இரு இடங்களில் வந்த 190 தொகுதிகளை 'நேருக்கு நேர் தொகுதிகள்' என்று நாம் கருதலாம். இதில் 175 இடங்களை பா.ஜ,., வெல்ல, காங்கிரஸால் 15 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
களத்தில் காங்கிரசைப் பிரதான போட்டியாளராக எதிர்கொள்ளும் இடங்களில் பா.ஜ.,வின் வெற்றி விகிதம் 92 சதவீதம் எனும் அளவுக்கு இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையிலான ஓட்டு வேறுபாடும் அதிகபட்சமாக- 20 சதவீதம்.
இந்த முறை பா.ஜ.,வை வீழ்த்தவும், 'இண்டியா' கூட்டணியை ஆட்சியில் அமர்த்தவும் வேண்டும் என்றால், குறைந்தது 125 இடங்களையேனும் காங்கிரஸ் வெல்ல வேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த எண்கள் நமக்குச் சொல்கின்றன.
செல்வாக்கான தொகுதி
நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் இதில் முக்கியமான களம். மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இங்கு சமாஜ்வாதி 53; காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகின்றன.
இவற்றில் அமேதியும், ரேபரேலியும் தான் காங்கிரசுக்கு முதன்மை வெற்றி வாய்ப்புள்ள இரு இடங்கள். இரண்டுமே காங்கிரஸ் முதல் குடும்பத்துக்கு நெருக்கமான தொகுதிகள்.
ரேபரேலி, 1951ல் உருவாக்கப்பட்ட தொகுதி. மூன்று முறை நீங்கலாக காங்கிரசுக்கு எப்போதும் வெற்றியைக் கொடுத்துஉள்ளது.
மக்களிடம் நெருக்கடி நிலை உண்டாக்கிய அதிருப்தியின் விளைவாக 1977ல் இந்திரா இங்கு தோல்வியைத் தழுவினார். உத்தர பிரதேசத்தில் வாஜ்பாய் அலை உருவெடுத்த 1996, 1998 தேர்தல்களில் விக்ரம் கவுல், தீபா கவுல் தோல்வியைத் தழுவினர்.
இவை நீங்கலாக காங்கிரசே வென்றது. குறிப்பாக பெரோஸ் காந்தி (1952, 1957), இந்திரா (1967, 1971), அருண் நேரு (1980, 1984), சோனியா (2004, 2006, 2009, 2014, 2019) என்று நேரு குடும்பத்தினர் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியைத் தந்த தொகுதி இது.
அமேதியும் அப்படித்தான். 1967ல் தொகுதியாக இது உருவாக்கப்பட்டது. இங்கும் மூன்று முறை நீங்கலாக காங்கிரசே வென்றுள்ளது. 1977ல் சஞ்சய்; 1998ல் சதீஷ் சர்மா இருவரும் தோல்வியைத் தழுவினர். 2019ல் அமேதியோடு, வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டபோது இங்கு தோல்வியைத் தழுவினார்.
சஞ்சய் (1980), ராஜிவ் (1981,1984, 1989, 1991), சோனியா (1998), ராகுல் (2004, 2009, 2014) என்று நேரு குடும்பத்தினருக்கு வெற்றியோடு அறிமுகமும் தந்த தொகுதி இது.
நெருக்கடி
வயோதிகத்தின் காரணமாக சோனியா இம்முறை போட்டியிடாத சூழலில், அவருடைய இரு பிள்ளைகளும் இங்கிருந்து போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வலியுறுத்தி வந்தனர்.
மாநிலத்தின் 80 தொகுதிகளோடு, ஹிந்தி பிராந்தியத்தின் 200க்கும் அதிகமான தொகுதிகளில் தாக்கத்தை உண்டாக்கவும் இது அவசியம் என்பது அவர்களுடைய எண்ணம்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி இருவரும் இங்கு பெரும் கூட்ட ஈர்ப்பாளர்கள் என்பது பா.ஜ.,வின் பெரும் பலம்.
அடுத்த நிலையிலும் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் என்று ஒரு நீண்ட பேச்சாளர்கள் வரிசையை பா.ஜ., வைத்துள்ளது. காங்கிரசோ பிரசாரத்துக்கு பிரதானமாக ராகுல், பிரியங்கா இருவரையே நம்பியுள்ளது.
அமேதி, ரேபரேலி இரு தொகுதிகளிலும் மே 20 அன்று ஓட்டுப்பதிவு; இதற்குள் மே 7, மே 13 என்று அடுத்த 15 நாட்களில் இரண்டு கட்ட ஓட்டுப்பதிவுகள் இருக்கின்றன.
இரண்டும் பக்கத்துப் பக்கத்துத் தொகுதிகள் என்பதால், அமேதியிலும், ரேபரேலியிலும் ராகுலும், பிரியங்காவும் வேட்பாளர்களாக நின்றால், இங்கிருந்தபடி உத்தர பிரதேச பிரசாரத்தை ஒருவர் கவனிக்கலாம்; மற்றொருவர் வெளிமாநிலங்களுக்குச் செல்லலாம்.
அமேதியில் ஸ்மிருதி இரானியை இறக்கியுள்ள பா.ஜ., ரேபரேலியில் தினேஷ் பிரதாப் சிங்கை வேட்பாளராக அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இரு தொகுதிகளிலும் தன் கட்சி கட்டமைப்பைத் திட்டமிட்டு பா.ஜ., வலுப்படுத்தியுள்ளது. காந்திகள் நீங்கலாக வேறு யார் நின்றாலும் காங்கிரஸ் இங்கே வெல்வது சிரமம்.
இதையெல்லாம் சொல்லித்தான் ராகுல், பிரியங்காவை வேட்பாளர்களாக்க கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
வியூகமா, குழப்பமா?
தெற்கில் இம்முறை 50 தொகுதிகள் வெல்வதை காங்கிரஸ் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கு கேரளாவில் சென்ற முறை போன்றே, 15 தொகுதிகளை வெல்ல வயநாட்டில் ராகுல் நிற்பது அவசியம் என்று கேரள தலைவர்கள் வலியுறுத்தினர்.
கேரள தேர்தல் முடிவதற்குள் அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் அறிவிப்பு வந்தால், அது அங்கு பாதிப்பை உண்டாக்கலாம்; இதனால் கேரள ஓட்டுப்பதிவு முடியும் ஏப்ரல் 26க்குப் பின் அறிவிப்பு வெளியாகும் என்று முன்னதாக காங்கிரஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமேதி, ரேபரேலியில் வேட்பு மனு தாக்கல் செய்ய மே 3 கடைசி நாள். ஆனால், கேரளாவில் ஓட்டுப்பதிவு முடிந்தும் ஒரு வாரத்துக்கு வேட்பாளர் அறிவிப்பை காங்கிரஸ் இழுத்தடித்தது.
இதற்கிடையே, 'இருவருக்குமே போட்டியிடும் விருப்பம் இல்லை. அமேதியில் ராகுல் மட்டும் போட்டியிடுகிறார்; பிரியங்கா வெளியே பிரசாரங்களை மட்டும் கவனிப்பார். பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ரா களம் இறக்கப்படுகிறார். வருண் அறிவிக்கப்படுவார்' என்றெல்லாம் தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
காங்கிரசே இதற்கான காரணம். தான் தேர்தலில் போட்டியிடுவதை நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக ராபர்ட் வாத்ரா பேட்டி அளித்தார்.
ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளால் காங்கிரஸ் தொண்டர்கள் பொறுமையின் எல்லைக்கே போயினர். அமேதியில் கட்சி அலுவலகம் முன் வீதியில் அமர்ந்து, 'ராகுல், பிரியங்கா போட்டியிடுவதை அறிவிக்க வேண்டும்' என, போராட்டம் நடத்தினர்.
நாடு முழுக்கவுள்ள கட்சியினரிடம் மட்டும் இன்றி, நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைமை தொடர்பாக எத்தகைய எண்ணங்களை இதெல்லாம் உருவாக்கும் என்பதை அக்கட்சித் தலைமை சிந்தித்ததாகத் தெரியவில்லை.
அமேதியில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் செயல்பாட்டாளர் ஒருவரிடம் பேசினேன். 'தலைவர்கள் நம் எதிர்த்தரப்பைக் குழப்பலாம்; சொந்த தரப்பையே குழப்பக் கூடாது. பிரசாரத்தை முடிக்க மே 18 கடைசி நாள் என்பதால், 15 நாட்கள்தான் மொத்த அவகாசமே உள்ளது. காந்திகள் தான் அறிவிக்கப்படப் போகின்றனர் என்பது முன்னரே எடுக்கப்பட்ட முடிவு என்றால், இவ்வளவு ஒத்திப்போட நியாயமே இல்லை.
'மாறாக, குடும்பத்தைச் சேராதவர்களைத்தான் அறிவிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்றால், 15 நாட்களில் அவர்களால் தொகுதி முழுதும் மக்களைச் சந்திப்பது எப்படிச் சாத்தியம் என்று எண்ணினார்கள்? கிட்டத்தட்ட 50 லட்சம் மக்களை உள்ளடக்கிய தொகுதிகள் இவை. பா.ஜ.,வினர் மூன்று மாதங்களாக இங்கே பிரசாரத்தில் இருக்கின்றனர்' என்றார்.
பா.ஜ., ஏற்கனவே ராகுலின் தலைமை தொடர்பாக மோசமான பிம்பத்தைக் கட்டமைத்துள்ளது. தனக்கு மிக நெருக்கமான இரு தொகுதிகள் தொடர்பாக முடிவெடுப்பதில் காங்கிரஸ் காட்டிய மவுனமும், தாமதமும் அதன் வியூகமாக அல்ல; நாடு முழுமைக்கும் அதன் தலைமை அனுப்பும் மோசமான சமிக்ஞையாகவே வெளிப்படுகிறது.
தொடர்புக்கு:
![]() |
writersamas@gmail.com