சட்டை பட்டன் போடாமல் ஆஜரான வழக்கறிஞருக்கு ஆறு மாதம் சிறை
சட்டை பட்டன் போடாமல் ஆஜரான வழக்கறிஞருக்கு ஆறு மாதம் சிறை
ADDED : ஏப் 12, 2025 02:35 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞருக்கான அங்கி அணியாமலும், பட்டன் போடாத சட்டை அணிந்து வந்ததாலும் வழக்கறிஞர் ஒருவருக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனையை விதித்துள்ளது.
சாதாரண உடை
உ.பி., அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அசோக் பாண்டே என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2021ல், வழக்கு ஒன்றில் ஆஜராக உயர் நீதிமன்றத்துக்கு அவர் வந்தார்.
அப்போது, வழக்கறிஞருக்கான அங்கி அணியாமல் சாதாரண உடையில் வந்த அவர், பட்டன் போடாமல் சட்டை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, நீதிபதிகளாக இருந்தவர்கள் இதை கண்டித்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றினர்.
அப்போது, நீதிபதிகளை 'குண்டர்கள்' என, அசோக் பாண்டே விமர்சித்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு அவர் பதிலளிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்றத்தை மதிக்காத வழக்கறிஞருக்கு முன்மாதிரியான தண்டனை அவசியம்.
அபராதம்
வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் உடை அணியாமல் வந்தது மட்டுமின்றி பட்டன் போடாமல் சட்டை அணிந்து வந்தது கண்ணியமற்ற செயல்.
இந்த விவகாரத்தில் நீண்ட காலமாக அசோக் பாண்டே விளக்கமளிக்காமல் உள்ளார்.
அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தாவிட்டால், மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
லக்னோ உயர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன், அசோக் பாண்டே நான்கு வாரங்களுக்குள் சரண் அடைய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.