நீதி தேவதை சிலை மாற்றம் வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு
நீதி தேவதை சிலை மாற்றம் வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு
ADDED : அக் 24, 2024 11:51 PM

புதுடில்லி :உச்ச நீதிமன்றத்தின் சின்னம் மற்றும் நீதி தேவதையின் சிலையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நுாலகத்தில், 6 அடி உயர புதிய நீதி தேவதை சிலை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நீதி தேவதை சிலையின் இடது கையில் கத்தி இருக்கும். ஆனால், புதிய சிலையில், அரசியலமைப்பு சாசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், தலையில் கிரீடம் காணப்படுகிறது. இதைத் தவிர, இதுவரை கண்கள் கருப்பு துணியால் மூடப்பட்டிருக்கும். புதிய சிலையில், அது நீக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிலை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் கபில் சிபல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர, முன்பு இருந்த நீதிபதிகள் நுாலகத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கும் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த இடத்தில், வழக்கறிஞர்களுக்காக நுாலகம் மற்றும் சிற்றுண்டி விற்பனை மையம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருவதாகவும், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.