நீதிபதி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு
நீதிபதி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு
ADDED : ஏப் 03, 2025 07:06 AM
கொல்கட்டா : டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா, கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவியேற்பை புறக்கணிப்பதுடன், அவருக்கு முன் வரும் வழக்குகளில் ஆஜராகப் போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மாவை, கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று, இந்த பணியிட மாற்றத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய சங்கங்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பியிருந்தன.
'பல வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளின்படி, நீதிபதி தினேஷ் குமார் சர்மா குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அவரை கொல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது' என, அதில் கூறப்பட்டிருந்தது.
கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன. அதில், சர்ச்சைக்குரிய நீதிபதியின் பதவியேற்பை புறக்கணிப்பதாக கூறியுள்ளன. மேலும், அவர் முன் வரும் வழக்குகளில் ஆஜராகப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

