லட்சுமண் சவதி, அண்ணா சாஹேப் பெலகாவியில் ஒரே காரில் பயணம்
லட்சுமண் சவதி, அண்ணா சாஹேப் பெலகாவியில் ஒரே காரில் பயணம்
ADDED : ஜன 30, 2024 08:09 AM
பெலகாவி அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியும், பா.ஜ., - எம்.பி., அண்ணா சாஹேப் ஜொல்லேவும், ஒரே காரில் பயணம் செய்ததுடன், ரகசிய பேச்சு நடத்தியது, சலசலப்பை ஏற்படுத்தியது.
பெலகாவி மாவட்ட கூட்டுறவு வங்கியில், நேற்று கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, சிக்கோடி பா.ஜ., - எம்.பி., அன்னா சாஹேப் ஜொல்லே, ஒரே காரில் வந்தனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பு, சவதி வீட்டில் ரகசிய பேச்சு நடத்தினர்.
இதன் பின், லட்சுமண் சவதி கூறியதாவது:
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கட்சி பாகுபாடு இல்லாதது. நாங்கள் ஒரே காரில் வந்ததில், எந்த முக்கியத்துவமும் இல்லை. வங்கி தலைவர் ரமேஷ் கத்திக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, நாங்கள் தயாராவதாக கூறுவது வதந்தி. வங்கியில் கோஷ்டி பூசல் இல்லை.
பா.ஜ.,வுக்கு என்னை அழைத்துச் செல்ல, ஒரு குழு தயாராவது குறித்து எனக்கு தெரியாது. நானோ, என் மகனோ எந்த கட்சியில் இருந்தும், லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டோம்.
லட்சுமண் சவதி மனதில் என்ன உள்ளது என்பதை, தெரிந்து கொண்டு அதன்பின் பேசுவதாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். என் மனதில் என்ன இருக்கிறது என்பது, எனக்கும், கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.