ஷெட்டரை தொடர்ந்து லட்சுமண் சவதி ஜனார்த்தன ரெட்டிக்கு பா.ஜ., வலை
ஷெட்டரை தொடர்ந்து லட்சுமண் சவதி ஜனார்த்தன ரெட்டிக்கு பா.ஜ., வலை
ADDED : ஜன 27, 2024 12:04 AM

பெங்களூரு- ஜெகதீஷ் ஷெட்டரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் லட்சுமண் சவதி மற்றும் ஜனார்த்தன ரெட்டிக்கு, பா.ஜ., வலை விரித்துள்ளது.
கர்நாடக பா.ஜ., தலைவராக, விஜயேந்திரா பதவியேற்ற பின், சுறுசுறுப்பாக செயல்படுகிறார். மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கட்சியை விட்டுச் சென்ற தலைவர்களை மீண்டும் பா.ஜ.,வுக்கு அழைத்து வர, ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முதற்கட்டமாக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு குறிவைக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஷெட்டருடன் பேச்சு நடத்தி, அவரது மனதை மாற்றினார். இவ்விரு தலைவர்களும், மும்பையில் இரண்டு முறை சந்தித்துப் பேசினர். அதன்பின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திராவை, பா.ஜ., மேலிடம் புதுடில்லிக்கு வரவழைத்தது.
ஷெட்டரும் 24ம் தேதி அங்கு சென்றார். அன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கவில்லை. நேற்று முன்தினம் இரண்டு தலைவர்களும் சந்தித்தனர்.
அதன் பின், காங்கிரசுக்கு முழுக்கு போட்டு, ஷெட்டர், பா.ஜ.,வுக்கு திரும்பினார்.
இதை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஷெட்டர் பா.ஜ.,வுக்கு திரும்புவதைத் தடுக்க, காங்கிரசுக்கு நேரம் கொடுக்காமல் பா.ஜ., தலைவர்கள் செயல்பட்டனர்.
தற்போது முன்னாள் அமைச்சர்கள் லட்சுமண் சவதி, ஜனார்த்தன ரெட்டிக்கு பா.ஜ., வலை விரித்துள்ளது.
இவர்களும் விரைவில் கட்சியில் சேருவர் என, கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

