UPDATED : பிப் 09, 2026 01:25 PM
ADDED : பிப் 05, 2026 06:57 AM

என்.டி.டி.வி.,யில் பணியாற்றிய போது நடந்த இந்த சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஒரு பாடம். எந்த செய்தி விஷயத்திலும் அவசரப் படக் கூடாது என்பதை கற்றுத் தந்த ஒரு நிகழ்வு. அலுவலகத்தில் இருந்தேன். சீனியர் பத்திரிகை நண்பரிடமிருந்து போன். “இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாது.
இது ஒரு எக்ஸ்குளூசிவ்,” என்றார். பரபரப்பு தொற்றிக் கொண்டது. டிவிக்கு இப்படிப்பட்ட செய்திதானே தேவை. “ஆனால் இதை இன்னும் ஒரு சோர்ஸிடமிருந்து நீ செக் செய்து கொள்ள வேண்டும்,” என எச்சரிக்கையும் செய்தார் அந்த நண்பர்.
அவர் சொன்ன செய்தி இதுதான்... தமிழகத்தைச் சேர்ந்த அந்த அரசியல் கட்சி தலைவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார் ஓராண்டுக்கும் மேலாக. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது. இனிமேலும் மருத்துவமனையில் வைத்துக் கொள்ள வேண்டாம்... இந்தியாவிற்கு எடுத்துச் செல்லுங்கள் என இந்திய அரசிடம் சொல்லிவிட்டார்கள்... இப்படிச்சொன்னார் அந்த நண்பர். இதைக் கேட்டவுடன் கையும் காலும் பரபரத்தன. ஹாட் நியூஸ் ஆயிற்றே. ஆனால் இந்த செய்தி சரிதானா என விசாரிக்க வேண்டுமே?
பிரதமர் அலுவலகத்தில் பெரிய லெவலில் யாராவது தெரிந்தால் மட்டுமே இந்த செய்தியை உறுதி செய்ய முடியும். என் செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயிடம் விஷயத்தைச் சொன்னேன். 'கிரேட்' என பதில் வந்தது. “ஆனால் இதை பிரதமர் அலுவலகத்தில் விசாரித்துவிட்டுதான் செய்தி flash செய்ய வேண்டும்” என சொன்னேன். என் எதிரிலேயே தொலைபேசியில் யார் யாருடனோ பேசினார் ராஜ்தீப். 10 நிமிடமாயிற்று. ராஜ்தீப்பிடம் ஒரு டென்ஷன் தெரிந்தது. நேராக ப்ளாஷ் நியூஸ் டைப் செய்யும் டெஸ்க் அருகே சென்றார்.
அந்த தலைவர் பெயரைச் சொல்லி, 'அவர் இறந்துவிட்டார் என உடனே ப்ரேக்கிங் நியூஸ் போடு' என்றார். “இந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டாயா? பின்னால் பிரச்னை வராதே” என்றேன். “அரே யார், லகாவோ... (போடு செய்தியை)” என்றார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எங்கள் சேனல் ஸ்கிரீனில் அந்த தலைவரின் மரணச் செய்தி பெரிதாக பிரேக்கிங் நியூஸ் என Flash ஆனது. என்.டி.டி.வி ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சேனல் நடத்தியது. எங்கள் ஹிந்தி சேனல் செய்தியை கவனிக்கும் உதவி ஆசிரியர் ஒருவர், “வைத்யா சார். இந்த செய்தியை வைத்து ஹிந்தியில் நீங்கள் லைவ் செய்ய முடியுமா'' என கேட்டார்.
ஏதாவது ஒரு முக்கிய செய்தி வந்தால் உடனே சம்பந்தப்பட்ட நிருபரிடம் நேரலையில் செய்தி வாசிப்பவர் கேள்வி கேட்க, நிருபர் பதில் சொல்வார். இதை லைவ் என்று டிவி பாணியில் அழைப்பது வழக்கம். எங்கள் அலுவலகத்தின் 7வது மாடியில் இதற்கெனவே ஒரு செட்டப் அப்போது இருந்தது. லைவ் செய்ய வேண்டுமென்றால் உடனே 7வது மாடிக்கு சென்று கேமரா முன் நின்றுவிடுவோம். இதைத்தான் செய்யுமாறு அந்த ஹிந்தி ஆசிரியர் என்னிடம் சொன்னார். இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டதா என தெரியாத நிலை. இரண்டாவதாக தமிழகம் தொடர்பான செய்தி. ஏதாவது தவறு ஏற்பட்டல் பெரும் பிரச்னை வரும். ஒரு கணம் யோசித்தேன்.
“நான் லைவ் செய்ய முடியாது. காரணம் இது ரொம்ப சென்சிடிவ் ஆன நியூஸ். அத்தோடு இது சரியான செய்தியா என்று கூட தெரியாத நிலையில் எப்படி நான் லைவ் செய்ய முடியும்” என மறுத்தேன். ஆனால் அவரோ என்னிடம் கெஞ்சாத குறையாக மீண்டும் கேட்க, நான் சுத்தமாக மறுத்துவிட்டேன்.
அலறிய அலுவலகம்
இந்த செய்தி டிவியில் வந்த அடுத்த சில நிமிடங்களில் சேனல் தலைவருக்கு சென்னையிலிருந்து போன். எந்த தலைவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியானதோ, அவருடைய மகன் பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. தலைவர் உடனே ராஜ்தீப்பைக் கூப்பிட்டார். இதற்கிடையே சென்னை செய்திப்பிரிவு தலைவி ஜெனிபர் அருள் டில்லி அலுவலகத்திற்கு போன் செய்துள்ளார். சென்னை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளதாகவும், இந்த செய்தியால் பிரச்னை வர வாய்ப்புள்ளது எனவும் சொல்லியிருக்கிறார்.
பாஸ் அறையிலிருந்து வெளியே வந்த ராஜ்தீப்,- 'உடனே அந்த பிரேக்கிங் நியூஸை எடுத்துவிடுங்கள்' என சத்தமாக சொல்ல... அனைவரும் ஷாக் ஆனார்கள். “அந்த செய்தி தவறு என அந்த தலைவரின் மகன் போன் செய்துள்ளார். டேக் இட் ஆப் ரைட் நவ்,'' என சத்தமாக சொல்ல, உடனே அந்த செய்தி நீக்கப்பட்டது. டிவியில் இது ஒரு வசதி. Flash செய்த ஒரு செய்தி தவறு என்றால் உடனே அதை எடுத்துவிடலாம். பத்திரிகையில் அந்த வசதி கிடையாது. நல்ல வேளை ஹிந்தியில் லைவ் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் என் நிலை என்னவாயிருக்கும்? ஒரு கணம் உடல் அதிர்ந்து ஓய்ந்தது.
அந்த ஹிந்தி சேனல் செய்தி ஆசிரியர் இந்த சம்பவத்தை மறக்கவேயில்லை. என்னை சந்திக்கும் போதெல்லாம்-, 'நீங்க எடுத்த முடிவு மிகவும் சரி'- என சொல்லிக் கொண்டேயிருப்பார். அந்த தலைவர் பிற்பாடு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து காலமானார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான், எந்த ஒரு விஐபி இறந்தாலும், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பம் அல்லது மருத்துவமனையிலிருந்து அறிக்கை வந்த பிறகுதான் செய்தி Flash செய்யும் வழக்கம் உருவானது.
- அ.வைத்தியநாதன்

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: vaithi@dinamalar.in

