சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்: 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறை
சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்: 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறை
UPDATED : ஆக 15, 2024 01:15 PM
ADDED : ஆக 15, 2024 01:14 PM

டில்லி: கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
கொடியேற்று நிகழ்வு
நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்பு
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள் என பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக கொடியேற்றும் போது, ராகுல், சோனியா பங்கேற்று இருந்தாலும், சாதாரண எம்.பி.க்களாகவே கலந்து கொண்டனர். பா.ஜ., ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே எதிர்க்கட்சி தலைவராக யாரும் இதுவரை பங்கேற்றதில்லை. இந்த நிலையில், முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக ராகுல் பங்கேற்றுள்ளார்.
பின்னணி
2014ல் 44 சீட்டுகளும், 2019ல் 52 சீட்டுகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்தது. எனவே, கடந்த 10 ஆண்டுகளாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற நிலையில், ராகுல் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.