பிரபல பஞ்சாபி நடிகர் பல்லா மரணம் முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்
பிரபல பஞ்சாபி நடிகர் பல்லா மரணம் முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்
ADDED : ஆக 23, 2025 01:30 AM

சண்டிகர்,:பிரபல பஞ்சாபி நடிகர் ஜஸ்விந்தர் சிங் பல்லா,65, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மொஹாலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணம் அடைந்தார்.
ஜஸ்விந்தர் சிங் பல்லாவுக்கு, 20ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மொஹாலி போர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பேராசிரியர் இந்நிலையில், நேற்று அதிகாலை 4:35 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் மொஹாலியில் இன்று நடக்கிறது.
பிரபல நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான ஜஸ்விந்தர் சிங் பல்லா, கேரி ஆன் ஜட்டா' 'மஹால் தீக் ஹை' 'காடி ஜண்டி எஹ் சல்லங்கான் மார்டி' 'ஜெட் ஏர்வேஸ்' மற்றும் 'ஜட் அண்ட் ஜூலியட் - 2 உள்ளிட்ட சினிமாக்கள் பஞ்சாப் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில், 1960ம் ஆண்டு மே 4ம் தேதி பிறந்த ஜஸ்வந்தர் சிங் பல்லா, பஞ்சாப் வேளாண் பல்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
கடந்த 1989ல் பஞ்சாப் வேளாண் பல்கலையில் உதவிப் பேராசிரியராக சேர்ந்த பல்லா, 2015ம் ஆண்டு விரிவாக்கக் கல்வித் துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பதவி உயர்த்தப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
பல்கலையில் பணிக்குச் சேருவதற்கு முன்பே, 1998ல் துல்லா பட்டி என்ற சினிமாவில் நடித்தார். அதைத் தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகர் ஜஸ்பால் பட்டி இயக்கிய, மஹால் தீக் ஹை என்ற படம் 1999ல் வெளியாகி, பல்லாவுக்கு பெரும் புகழை சம்பாதித்துக் கொடுத்தது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
ஜஸ்விந்தர் சிங் பல்லா இந்த உலகை விட்டு சென்றது மிகவும் துக்ககரமானது. மிகவும் வருந்துகிறேன். இறைவன் காலடியில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். சாச்சா சத்தர் எப்போதும் நம் இதயங்களில் குடியிருப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதயத்தில் ஆட்சி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங், “ஜஸ்விந்தர் சிங் பல்லாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். வருத்தம். சமூகத்துக்கான அவரது பங்களிப்பு மற்றும் அன்பு எப்போதும் நினைவுகூரப்படும்,”என. கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, “ ஜஸ்விந்தர் சிங் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது ஒப்பிட முடியாத புத்திசாலித்தனம், நடிப்பு, ரசிகர்களை சிரிக்க வைக்கும் பாங்கு ஆகியவை நம் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,”என, கூறியுள்ளார்.
சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “பஞ்சாப் மக்களின் இதயங்களில் தன் நடிப்பால் ஆட்சி செய்தவர் ஜஸ்விந்தர் சிங் பல்லா,”என, புகழாரம் சூட்டியுள்ளார்.