தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தலைமுறை பட்சணங்களை மறக்காத தலைவிகள்

தலைமுறை பட்சணங்களை மறக்காத தலைவிகள்

தலைமுறை பட்சணங்களை மறக்காத தலைவிகள்


ADDED : நவ 01, 2024 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 07:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி என்று சொன்னாலே, நம் மனதில் கொண்டாட்டம் தான். புதிய ஆடை அணிந்து, குடும்பத்துடன் பட்டாசுகள் வெடித்து அன்றைய தினத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் நாள்.

இதற்கு அடையாளமாக நம் சந்தோஷத்தை பலகாரங்களை பகிர்ந்து, மற்றவர்களுடன் கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளி அன்று முறுக்கு, அதிரசம் இல்லாத வீடுகளே இல்லை. 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு, தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே, பாட்டிகளும், அம்மாக்கள், அத்தைகள் என உறவுகள் சேர்ந்து பட்சணங்கள் செய்து, பெரிய பெரிய பெட்டிகளில் அடைத்து வைத்திருப்பர்.

இதை பார்க்கும் சிறுவர்கள், தீபாவளிக்கு முந்தைய இரவு உறக்கம் வராமல் தவிப்பர். எப்போது தீபாவளி வரும் என்று காத்திருப்பர். தீபாவளி பட்சணங்கள் வீட்டில் செய்வது ஒரு கலை. பாட்டியிடம் இருந்து அம்மாவுக்கும்; அம்மாவிடம் இருந்து மகளுக்கும்; மகளிடம் இருந்து பேத்திக்கும் கைமாறிய ஒரு கலை.

ஆனால் இன்று பலரும் ஒரு பட்சணத்தை கூட வீட்டில் செய்வதில்லை. கடையில் தான் வாங்கிக் கொண்டாடுகின்றனர்.

வரும் காலத்தில் அரிசி எங்கிருந்து விளைகிறது என்று குழந்தைகளிடம் கேட்டால், சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் என்று சொல்வது போன்று, பட்சணங்களும் கடையில் கிடைக்கும் என்று கூறும் நிலை உருவாகி வருகிறது.

இந்த கலை அழியாமல் இருக்க வேண்டும்; இது வெறும் செய்முறையல்ல; கூட்டு முயற்சியாக உள்ளது; ஒரு தாய் தான், தன் மகள்களுக்கு இந்த கலையை கற்று கொடுக்க வேண்டும்.

தீபாவளி பட்சணம் வீட்டில் செய்வீர்களா அல்லது கடையில் வாங்குவீர்களா என இரு தலைமுறையை சேர்ந்த, சில இல்லத்தரசிகளிடம் கேட்டபோது, அவர்கள் உதிர்த்த சில முத்துக்கள்...

தீபாவளி லேகியம் சுக்கு

வீட்டில் செய்வதன் அடிப்படை காரணம், சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். மற்றொரு காரணம், கடைகளில் செய்யும் போது, யாரோ தான் சாப்பிடுவர். அவர்களுக்கு இது வேலையாக தெரியும் கலையாக தெரியாது. இதுவே வீட்டில் செய்யும்போது நம் குடும்பத்தினர், உறவினர்கள் சாப்பிட வேண்டும் என்ற அக்கறை மட்டுமின்றி பக்தியுடன் செய்வர். இதன் மூலம் அவர்களின் அன்பு, பட்சணங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரிமாறப்படுகிறது.

மேலும் பலகாரங்களுடன் தீபாவளி லேகியமான சுக்கு, சித்தரத்தை, மிளகு, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம் ஆகியவைகளை பவுடராக்கி, தேன் கலந்து லேகியமாக செய்வது முக்கியம். இது உணவை ஜீரணமாக்குவதுடன் சளி, ஜுரம், இருமல்களுக்கும் நல்ல மருந்தாகவும் செயல்படும். எங்கள் வீட்டில் பாரம்பரியமாக செய்து வருகிறோம். இம்முறை என் மருமகள்கள் மூலம் பட்சணம் செய்துள்ளேன்.

- பானுமதி ராஜா பாலசந்திர சிவம்,

குடும்ப தலைவி, திம்மையா சாலை.

வேகமெடுக்கும் வாழ்க்கை

இன்றைய வாழ்க்கை மிகவும் வேகமாக நகர்கிறது. பட்சணம் செய்யக்கூட 'டைம்' இருப்பதில்லை. ஆனால், நாங்கள் அப்படியில்லை. எங்கள் வீட்டிலேயே பட்சணம் செய்கிறோம். இம்முறை முறுக்கு, அதிரசம் செய்துள்ளேன். அதற்காக கடையில் விற்கும் பலகாரங்கள் நன்றாக இல்லை என்று அர்த்தமல்ல. நானே செய்வதால், எனக்கு திருப்தி ஏற்படுகிறது.

- சசிரேகா கண்ணன்,

குடும்ப தலைவி, ஹலசூரு.

விரதம் இருந்து செய்வோம்

தீபாவளியையொட்டி, கேதார கவுரி விரதம் இருப்பதால், நோன்பு இருந்து வீட்டிலேயே பட்சணம் செய்வோம். வீட்டில் செய்வதால் சுத்தமாக இருக்கும். கடைகளில் எப்படி செய்கின்றனர் என்பது தெரியாது. விரதம் இருந்து செய்வதால் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரியவர்கள் பட்சணம் செய்யும் போது, அதன் செய்முறையை குழந்தைகள் கற்றுக்கொள்வர். வழக்கம் போல், வீட்டிலேயே செய்தோம்.

-- உமாதேவி சந்திரசேகர்,

குடும்ப தலைவி, பையப்பா கார்டன்.

பாரம்பரியம்

பாரம்பரியமாக வீட்டிலேயே தீபாவளி பட்சணம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் கூறி உள்ளனர். இதை இன்று வரை பின்பற்றி வருகிறோம். இதனால், பல நன்மைகள் ஏற்படுகிறது. சாதாரண நாட்களில் கடைகளில் வாங்கி சாப்பிடுவோம். பண்டிகைக்கு முன்னதாகவே எல்லாம் ரெடி செய்து விடுவோம். எனது தாயார், எனது மாமியார் சொல்லிய வழிமுறையை பின்பற்றி வருகிறோம். வருங்காலத்தில் என் மகன், மகள் குடும்பத்தினருக்கும் சொல்லித் தருவேன்.

- எஸ்.லட்சுமி சுவாமிநாதன்,

குடும்ப தலைவி, ஹலசூரு.

புத்துணர்ச்சி

வீட்டிலேயே தீபாவளி பட்சணம் செய்வது எனக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. தட்டை, முறுக்கு, அதிரசத்துடன் பிடித்த இனிப்பு வகைகள் செய்து வருகிறேன். கடையில் விற்கும் இனிப்புகள் வேறு டேஸ்ட்டுடன் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டிலேயே பாரம்பரிய முறைப்படி செய்வது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

- மகேஸ்வரி விஜயசாரதி,

குடும்ப தலைவி, லட்சுமண முதலியார் தெரு - நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us