ADDED : பிப் 20, 2025 06:46 AM

ஜீவன்பீமாநகர்: பெங்களூரில் இரண்டு மாடி கட்ட வீடு, ஒரு பக்கமாக சாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பெங்களூரு, ஜீவன்பீமாநகர் திப்பசந்திரா பகுதியில் உள்ள, இரண்டு மாடி கட்டடத்தில் 5 குடியிருப்புகள் உள்ளன. நேற்று மாலை 4:30 மணி அளவில், அந்த கட்டடம் திடீரென ஒரு பக்கமாக சாயத் துவங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கட்டடத்திற்குள் சென்று ஐந்து வீடுகளிலும் இருந்த, ஆறு பேரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். யாருக்கு காயம் ஏற்படவில்லை.
கட்டடம் சாய்ந்ததில் ஐந்து பைக்குகள் சேதம் அடைந்தன. எந்த நேரத்திலும் அந்த கட்டடம் முழுமையாக இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பு அமைத்து, யாரும் உள்ளே செல்ல தடைவிதித்து, போலீசார் எச்சரித்துள்ளனர். சாய்ந்து உள்ள கட்டடத்தின் அருகில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு அறிவியல்பூர்வமற்ற முறையில் நடக்கும் பணிகளால், இந்த கட்டடம் சாய்ந்ததாக கூறப்படுகிறது.