இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
ADDED : ஆக 03, 2025 03:52 PM

ஸ்ரீநகர்: ராணுவத்தினரின் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி கலந்து கொண்ட விவரம் வெளியாகி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்கும் நோக்கில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கைகளை ராணுவம் செயல்படுத்தி வருகிறது. 2 நாட்கள் முன்பு இந்திய ராணுவத்தினர், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதியான தாகிர் ஹபாப் என்பவனை சுட்டுக் கொன்றனர்.
இந் நிலையில், தாகிர் ஹபாப் இறுதிச்சடங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் பகுதியில் உள்ள காய்கலாவில் நடந்ததாக தெரிகிறது. இந்த இறுதிச்சடங்கின் போது, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதியான ரிஸ்வான் ஹனிப் கலந்து கொண்ட விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்நிகழ்வில் ரிஸ்வான் ஹனிப் பங்கேற்க, கொல்லப்பட்ட தாகிர் ஹபாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாகவும், ஆனால் துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டி அவன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதே சமயம், இறுதிச்சடங்கில் ரிஸ்வான் ஹனிப் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.