சித்தாந்த சண்டை நடக்குது; சிவாஜி வழியில் போராடுவோம் என்கிறார் ராகுல்
சித்தாந்த சண்டை நடக்குது; சிவாஜி வழியில் போராடுவோம் என்கிறார் ராகுல்
ADDED : அக் 05, 2024 12:55 PM

மும்பை: 'நாடு அனைவருக்கும் சொந்தமானது. சிவாஜி மகாராஜின் வழியைப் பின்பற்றி, மக்களின் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்' என்று, மஹாராஷ்டிராவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசினார்.
மஹாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், ராகுல் பேசியதாவது: சிவாஜி மகாராஜ் எதிர்த்து போராடிய, அதே சித்தாந்தத்திற்காக இன்று காங்கிரஸ் போராடி வருகிறது. பா.ஜ.,வால் நிறுவப்பட்ட சிவாஜி சிலை, சில நாட்களில் இடிந்து விழுந்துவிட்டது. இந்த சம்பவம், சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என்றால், முதலில் அவரது சிந்தாந்தத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அநீதி
இன்று நாங்கள் சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைத்தோம். சிவாஜி மகாராஜ் தன் வாழ்நாள் முழுவதும் எப்படிப் போராடினாரோ, அந்த விஷயங்களுக்காக நாமும் போராட வேண்டும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் அநீதிக்கு எதிராக போராடினார். நீதி கிடைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் சத்தியத்தின் பாதையைப் பின்பற்றக் கற்றுக் கொடுத்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ், நாடு அனைவருக்கும் சொந்தமானது. யாருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
சித்தாந்த சண்டை
சிவாஜி மகாராஜின் சிந்தனையின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அவரது வழியைப் பின்பற்றி, மக்களின் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ராமர் கோயில் மற்றும் பார்லிமென்ட் திறப்பு விழாவிற்கு, பழங்குடியினத்தை சேர்ந்த ஜனாதிபதியை அழைக்கவில்லை. இது அரசியல் சண்டை அல்ல, சித்தாந்த சண்டை. இவ்வாறு அவர் பேசினார்.