நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுபடுவோம்! அமைச்சர் முகமது ரியாஸ் அழைப்பு
நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுபடுவோம்! அமைச்சர் முகமது ரியாஸ் அழைப்பு
ADDED : பிப் 17, 2025 10:30 PM

பாலக்காடு; நாட்டின் வளர்ச்சிக்காக, அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், என, கேரள பொதுப்பணி- மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணாபுரம் - -முரியங்கண்ணி இடையே, 31.6 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட சாலையை பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., மம்மிக்குட்டி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பிரேம்குமார் பங்கேற்றனர்.
விழாவில், பொதுப்பணி- மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்காக, அரசியல் கட்சி வேறுபாடின்றி, அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். சாலைகளின் தரத்தை உறுதி செய்வதும், கட்டுமான செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதும் மாநில அரசின் குறிக்கோளாகும்.
ஆட்சிக் காலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் உறுதித் தன்மையினால், கன்னியாகுமரி - மும்பை தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு சாத்தியமானது. தேசிய நெடுஞ்சாலைக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு ரூ.5,580 கோடி செலவிட்டது.
கிராமப்புறங்கள் உட்பட, தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில், பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள, 60 சதவீத சாலைகளும் தரமானதாக உயர்த்த முடிந்தது. ஐந்து ஆண்டுகளில் நூறு பாலங்கள் கட்டும் இலக்கு மூன்று ஆண்டுகளில் அடைய முடிந்தது.
இவ்வாறு, அவர் பேசினார்.

