இந்திய பொருட்களை வாங்குவோம்; பயன்படுத்துவோம்: ஜனாதிபதி அழைப்பு
இந்திய பொருட்களை வாங்குவோம்; பயன்படுத்துவோம்: ஜனாதிபதி அழைப்பு
UPDATED : ஆக 14, 2025 10:50 PM
ADDED : ஆக 14, 2025 08:41 PM

புதுடில்லி: '' இந்தியா பொருட்களையே வாங்குவோம். பயன்படுத்துவோம் என அனைவரும் உறுதி ஏற்போம்,'' என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: தன்னிறைவு பெற்ற நாடு என்ற பாதையில் இந்தியா பெரும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கிறது. அனைத்து மனிதர்களும் சமம். அனைவரையும் கவுரவத்துடன் நடத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வியை அனைவரும் சமமாக அணுக வேண்டும். சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ஏற்றுமதி அதிகரிக்கிறது. அனைத்தும் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.6.5 சதவீத ஜிடிபி உடன் நாடு வேகமாக வளர்ச்சி பெறுகிறது.
முன்மாதிரி
2047 ல் வளர்ச்சியடைந்த நாடு என்ற பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. சிறந்த நிர்வாகம் மற்றும் ஊழலை சகித்து கொள்ள முடியாது என்ற கொள்கையுடன் அரசு பயணித்து வருகிறது. சுதேஷி என்ற கொள்கை மேக் இன் இந்தியா மற்றும் தன்னிறைவு பெற்ற பாரதம் என்ற கொள்கைக்கு முன்மாதிரியாக உள்ளது. இந்திய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம் என உறுதி ஏற்போம். அனைத்து கிராமங்களிலும் 4ஜி சேவை கிடைத்துள்ளது.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக உறுதியுடன் ஆக்கப்பூர்வமாக இந்தியா பதிலடி கொடுத்தது. நாட்டை பாதுகாக்க எந்த சவாலையும் சந்திக்க நமது ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதை காட்டுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் முழு உற்சாகத்துடன் நாம் கொண்டாடுவது பெருமை அளிக்கிறது. இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.
அஞ்சலி
வரலாற்றை திருப்பி பார்க்கும் போது நாடு பிரிவினையின் போது ஏற்பட்ட வேதனையை நாம் மறக்கக்கூடாது. பிரிவினை காரணமாக மோசமான வன்முறைகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் இடம் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. வரலாற்றின் இந்த தவறுகளுக்காக பலியானவர்களுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.