ADDED : அக் 09, 2024 11:01 PM

தசரா பண்டிகை என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதை கொண்டாட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா. துமகூரை தேர்வு செய்து, சுற்றுலா திட்டமிடலாம்.
பெங்களூரில் இருந்து 70 கி.மீ., துாரத்தில் துமகூரு உள்ளது. இங்கு புராதன கோட்டை, ராமாயணத்தை நினைவூட்டும் புனிதமான தலங்கள், விசாலமான வனம், ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் கோவில்கள், மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை அளிக்கும் மலைகளை காணலாம்.
* போக நரசிம்மர்
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, துமகூருக்கு பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஒரே நாளில் பார்த்து ரசிக்க கூடிய, இயற்கை எழில் மிகுந்த இடங்கள் ஏராளம். துமகூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள் அதிகம் உள்ளன. இவற்றில் போக நரசிம்மர் கோவிலும் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம சுவாமி கோவில் இதுவாகும்.
தேவராயனதுர்காவின், மலை அடிவாரத்தில் போக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. சுவாமியை தரிசனம் செய்து கொண்டு, மலை மீது ஏறி உச்சிக்கு சென்றால், அற்புதமான இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். அனைத்தையும் மறந்து சிறிது நேரம் அமர்ந்து, அமைதியான சூழலை ஆனந்திக்கலாம். இந்த அற்புதமான உணர்வை தவிர, வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை என தோன்றும்.
மலையேற்றம் செல்வோருக்கு, தகுதியான இடமாகும். துமகூரில் இருந்து தேவராயனதுர்காவுக்கு அரசு பஸ்கள், தனியார் வாகன வசதிகள் உள்ளன.
* யோக நரசிம்மர்
துமகூரு, தேவராயனதுர்காவில் யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இது போக நரசிம்ம சுவாமி கோவிலை விட, சிறிது உயரமான மலையில் உள்ளது. யோக நரசிம்மர் கோவில் புராதனமான கோவிலாகும். திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது.
கலை நயமிக்க துாண்கள், இங்கு செதுக்கப்பட்ட ஓவியங்கள், கோவிலின் அழகை மெருகேற்றுகிறது. தாபஸ்பேட்டை வழியாக, கோவிலை அடையலாம். அரசு, தனியார் வாகன வசதி உள்ளது.
* சிவகங்கை மலை
கடல் மட்டத்தில் இருந்து 1,368 அடி உயரத்தில் சிவகங்கை மலை உள்ளது. திருத்தலமாகவும், இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இது துமகூருக்கு வெகு அருகில் உள்ளது. சிவன் குடிகொண்டுள்ள இந்த மலையை, 'தென்காசி' என அழைக்கின்றனர்.
மலை மீது கங்காதரேஸ்வரர் கோவில், தீர்த்த குளம், நந்தி விக்ரகம், பாதாள கங்கை உள்ளன. திரில்லிங்கான சாகச விளையாட்டை விரும்புவோருக்கு, சிவகங்கை மலை தகுதியானதாகும். மலையேற்றம் செல்லலாம்.
* தேவராயனதுர்கா
நண்பர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால், தேவராயனதுர்கா கோட்டையை தேர்வு செய்து கொள்ளலாம். இது உயரமான மலை மீது கட்டப்பட்டுள்ளது. பசுமையான சூழலுக்கு நடுவில் கோட்டை அமைந்துள்ளது. 17ம் நுாற்றாண்டில் மைசூரு உடையார், இந்த கோட்டையை கட்டியதாக, வரலாறு கூறுகிறது.
தற்போது இந்த கோட்டை இடிந்த நிலையில் உள்ளது. ஆனால் இங்கிருந்து சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பது மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். இதை காணவே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், கோட்டைக்கு வருகின்றனர். தேவராயனதுர்கா கோட்டையை காணவும், அரசு, தனியார் வாகன வசதி உள்ளது.
* நாமத சிலுமே
துமகூரில் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்களில், நாமத சிலுமேவும் ஒன்றாகும். இந்த இடத்தில் ஒரு ஓட்டையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுக்கிறது. இதற்கும், ராமாயணத்துக்கும் தொடர்பு உள்ளது.
ஸ்ரீராமன் தன் நெற்றியில் செந்துாரம் இட்டு கொள்ள, தண்ணீர் தேவைப்பட்டது. அவர் அம்பு எய்த போது, பள்ளம் ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. அந்த இடமே தற்போதைய நாமத சிலுமேவாகும். போக நரசிம்மர் கோவிலில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் நாமத சிலுமே அமைந்துள்ளது.
- நமது நிருபர் -