'பட்கல் மசூதியை இடிப்போம்' பா.ஜ., - எம்.பி., சர்ச்சை பேச்சு
'பட்கல் மசூதியை இடிப்போம்' பா.ஜ., - எம்.பி., சர்ச்சை பேச்சு
ADDED : ஜன 13, 2024 11:14 PM

கார்வார்: ''பாபர் மசூதியை போன்று, பட்கல் மசூதியையும் இடிப்போம்'' என, பா.ஜ., - எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
உத்தர கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே. இவர் குமட்டாவில் நடந்த பா.ஜ., தொண்டர்கள் கூட்டத்தில் பேசியது:
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் 22ம் தேதி, நமக்கு பொன்னான நாள்.
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்ல மாட்டோம் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். ஹிந்து கோவில்கள் இருந்த இடத்தில், தற்போது மசூதிகள் உள்ளன.
ஷிர்சி சி.பி., பஜாரில் உள்ள மசூதி, இதற்கு முன் விஜய விட்டல் கோவிலாக இருந்தது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள மசூதி, ஒரு காலத்தில் மாருதி கோவிலாக இருந்தது.
அந்த மசூதிக்கு சென்று பார்த்தால், மாருதி கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருக்கும்.
பாபர் மசூதியை இடித்தது போன்று, பட்கல்லில் உள்ள மசூதியையும் இடிப்போம். இது எனது முடிவு இல்லை. ஹிந்து சமூகத்தின் முடிவு. ஹிந்து கோவில்கள் இருந்த இடங்களில், மசூதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதை மீட்கும் வரை, ஹிந்து சமூகம் ஓயாது.
பழிவாங்குவதை நிறைவேற்றவில்லை என்றால், நமது உடலில் ஓடுவது, ஹிந்து ரத்தம் இல்லை. முதல்வர் சித்தராமையாவை போன்ற சிலர், ஹிந்து சமூகத்தை உடைத்து வருகின்றனர். காங்கிரசை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை.
ஹிந்து மதம், சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்களும், எங்கள் எதிரிகள். சித்தராமையா எங்களுக்கு எதிரி. ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று கூறுகிறார். இப்போது செல்வேன் என்கிறார். இதுவே ஹிந்து சமூகத்தின் பலம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மனிதன் இல்லை
முதல்வர் பதவியில் இருப்பவரை மரியாதையாக பேசுவரும் உள்ளனர். மரியாதை குறைவாக பேசுபவரும் உள்ளனர். அரசியலுக்காக என்னை ஒருமையில் பேசிய அனந்தகுமார் ஹெக்டேயிடம் இருந்து, நான் மரியாதையை எதிர்பார்க்க முடியுமா? இப்படி பேசுவது தான் அவரின் கலாசாரம். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவே, நாங்கள் ஆட்சிக்கு வந்து உள்ளோம் என்று கூறியவர் அவர். அவரை மாதிரி பேச முடியுமா? அவர் மனிதன் இல்லை.
- சித்தராமையா,
முதல்வர்
எதிர்பார்க்க முடியுமா?
பா.ஜ.,வினர் இப்படி பேசுவது ஒன்றும் புதிது இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து, அவர்கள் தாக்கிப் பேசுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறியவரிடம் இருந்து, நல்ல வார்த்தைகளை எதிர்பார்க்க முடியுமா? கலவரங்களை துாண்டும் வகையில் பேசுபவர்கள் மீது, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அனந்தகுமார் ஹெக்டே மீது அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வாக்குறுதியில் அளித்தபடி மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஹரிபிரசாத்,
காங்கிரஸ் எம்.எல்.சி.,

