வெறுப்புணர்வை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம்: தொண்டர்களுக்கு ராகுல் வலியுறுத்தல்
வெறுப்புணர்வை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம்: தொண்டர்களுக்கு ராகுல் வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2024 03:35 PM

பாட்னா: 'பா.ஜ.,வினர் பரப்பும் வெறுப்புணர்வை எதிர்த்து நாம் ஒன்றிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்' என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியுள்ளார்.
'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூர் முதல் மஹாராஷ்டிராவின் மும்பை வரை 2வது கட்ட யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல். இந்த யாத்திரை தற்போது பீஹார் மாநிலத்தில் தொடர்கிறது. பீஹாருக்குள் யாத்திரை நுழைந்ததும், ராகுல் வந்த ஜீப்பை அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஓட்டி வந்தார். ராகுலுக்கு காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மொஹனியா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்கு மத்தியில் ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் தொண்டர்களாகிய நீங்கள், மக்களை ஒன்றிணைக்க அன்பு கடையை திறந்துள்ளீர்கள். பா.ஜ.,வினர் பரப்பும் வெறுப்புணர்வை எதிர்த்து நாம் ஒன்றிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம். இது வெறுப்புக்கான நாடு அல்ல; இது அன்பும் சகோதரத்துவமும் கொண்ட நாடு. உங்கள் (தொண்டர்கள்) ரத்தத்தில், உங்கள் டிஎன்ஏ.,வில் வெறுப்பு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.