ADDED : மே 03, 2025 12:04 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்து வரும், 'வேவ்ஸ்' எனப்படும், சர்வதேச ஒலி - ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் நேற்று பங்கேற்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவது கவலையை அதிகரித்துள்ளது. ஒருதரப்பு சார்புகளை குறைத்தல், உள்ளடக்கத்தை ஜனநாயகப்படுத்துதல் மற்றும் அதன் நெறிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை முக்கிய விவாதமாக உள்ளன.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில், நம் பாரம்பரியமும், தொழில்நுட்ப மும் கைகோர்க்க வேண்டியது அவசியம். இந்த உலகம் அடிப்படையில், உள்ளார்ந்த ரீதியாக பன்முகத்தன்மை உடையது.
காலனித்துவம் மற்றும் பெரும் வல்லரசுகளின் ஆதிக்கத்தால் இந்த பன்முகத்தன்மை ஒடுக்கப்பட்டது.
சர்வதேச ஒழுங்கை ஜனநாயகப்படுத்த நாம் இப்போது முயற்சிக்கும்போது, அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மட்டும் உறுதிப்படுத்துவது போதாது. நம் மரபுகள், பாரம்பரியம், கருத்துகள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்பதும் அதே அளவுக்கு அவசியம்.
வரும், 2047ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நம் முயற்சிக்கு இந்த புதுமைகள் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.