மம்தாவின் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்; மே.வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி சபதம்
மம்தாவின் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்; மே.வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி சபதம்
UPDATED : டிச 21, 2025 09:09 AM
ADDED : டிச 21, 2025 04:46 AM

கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம். ஊழல் மிகுந்த திரிணமுல் காங்., அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம். இந்த மக்கள் விரோத அரசால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
பொதுக்கூட்டம்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தாண்டு ஏப்ரலில் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தற்போதே சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் என்ற இடத்தில், பா.ஜ., பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்க கொல்கட்டாவுக்கு விமானத்தில் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஹெர்பூருக்கு புறப் பட்டார். கடும் பனிமூட்டத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து கொல்கட்டாவுக்கே பிரதமர் மோடி மீண்டும் திரும்பினார். அங்கிருந்தபடி, தொலைபேசி மூலம் தஹெ ர்பூரில் திரண்டிருந் த மக்களிடையே அவர் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசியதாவது: ஆளு ம் திரிணமுல் காங்., என்னையும், பா.ஜ., வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும். அது பற்றி கவ லை இல்லை. ஆனால், மக்களை பிணையாக வைத்து, அவர்களை துன்புறுத்தி, மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்தை அக்கட்சி தடுக்கக்கூடாது. ஊழல், வாரிசு அரசியல், ஓட்டு வங்கி அரசியல் ஆகியவை மாநிலத்தை ஆக்கிரமித்து உள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த காட்டாட்சிக்கு விரைவில் நாங்கள் முடிவு கட்டுவோம்.
மேற்கு வங்க அரசுக்கு தேவையான நிதியுதவியை அளித்து வருகிறோம். எந்த குறையும் வைக்கவில்லை. ஆனாலும், மாநிலத்தின் அனைத்து துறைகளிலும், 'கமிஷன் கலாசாரம்' தலைவிரித்தாடுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். இது வெறும் வாக்குறுதி அல்ல; எங்களது நீண்டகால கனவு. அதை நிறைவேற்ற வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
ஊழல் இல்லாத துாய்மையான ஆட்சியை தருவோம். அதற்கு, பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களே சாட்சி. பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது, அடுத்தாண்டு மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும். கங்கை நதி பீஹாரில் இருந்து மேற்கு வங்கத்தில் பாய்வது போல, பீஹார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும்.
எதிரொலிக்கும்
மேற்கு வங்கத்தில், ஊடுருவல்காரர் களுக்கு ஆளும் திரிணமுல் காங்., ஆதரவு அளிக்கிறது. அதனால் தான், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அக்கட்சி எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். இதில் சமரசத்துக்கே இடமில்லை. மேற்கு வங்கத்தின் வீதிகளில் இப்போது ஒரு முழக்கம் பலமாக ஒலிக்கிறது. அது, 'வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும்' என்ற முழக்கம் தான். திரிணமுல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

