இத்தோடு நிறுத்திக்குவோம்... ரணகளமாக்கிய பன்-கிரீம் விவகாரம்; 'என்டு கார்டு' போட்டது அன்னபூர்ணா!
இத்தோடு நிறுத்திக்குவோம்... ரணகளமாக்கிய பன்-கிரீம் விவகாரம்; 'என்டு கார்டு' போட்டது அன்னபூர்ணா!
ADDED : செப் 14, 2024 08:05 PM

கோவை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கூட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசிய பேச்சு பூதாகரமான நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் தரப்பில், பிரச்னையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சர்ச்சை
கடந்த 3 தினங்களுக்கு முன் கோவை கொடிசியாவில் தொழில்முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் உள்ள பிரச்னைகளை, பன், ஜாம், க்ரீம் என்று கலந்து ஜனரஞ்சகமாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசினார்.
மன்னிப்பு
அவரது இந்தப் பேச்சை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கினர். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இது தொடர்பான வீடியோவை, பா.ஜ.,வினர் வெளியிட்டதால், இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து, பா.ஜ., தரப்பில் மன்னிப்பும், விளக்கமும் கொடுக்கப்பட்டது.
முற்றுப்புள்ளி
இந்த நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் தரப்பில் இருந்து அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அவரது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை விளக்குவதற்காகவே, சொந்த விருப்பத்தின் பேரில், சீனிவாசன் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இது சம்பந்தமான வீடியோவை கட்சியினர் வெளியிட்டதற்காக, பா.ஜ., தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டதோடு, வீடியோவை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைப்பினரின் ஜி.எஸ்.டி., தொடர்பான குறைகேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கு நன்றி. இத்துடன் தேவையற்ற யூகங்களுக்கும், தவறான அரசியல் புரிதலுக்கும் முடிவு கட்ட விரும்புகிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.