கேரள உணவு பொருட்களை பரிசோதனை செய்யுமாறு கடிதம்: அபாயகரமான செயற்கை நிறங்கள் கலக்கப்படுவதாக புகார்
கேரள உணவு பொருட்களை பரிசோதனை செய்யுமாறு கடிதம்: அபாயகரமான செயற்கை நிறங்கள் கலக்கப்படுவதாக புகார்
ADDED : நவ 09, 2024 11:15 PM

பெங்களூரு: கேரளாவில் தயார் செய்து, கர்நாடகாவுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் தின்பண்டங்களில் அபாயகரமான செயற்கை நிறங்கள் கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கேரள அரசுக்கு மாநில உணவுத்துறை கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடகாவில் உணவு பாதுகாப்பில், மாநில அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. சாலையோர உணவகங்கள், ஹோட்டல்களில விற்கப்படும் உணவுகளில் சுவையை அதிகரிக்கவும், மக்களை கவரும் வகையிலும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த ரசாயனங்கள், நம் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.
இவைபோன்ற செயற்கை நிறமி சேர்க்கப்பட்டதால், குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாய்க்கு மாநில அரசு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, கோபி மஞ்சூரியன், சிக்கன் கபாப், பிஷ் கபாப் உள்ளிட்ட உணவு வகைகளிலும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன.
அதிகாரிகள் சோதனை
மேற்கண்ட உணவு வகைகளில் செயற்கை நிறங்கள் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
கேக்குகள், ஐஸ்கிரீம்களிலும், ரசாயனம் கொண்ட செயற்கை நிறங்கள் கலப்பது கண்டறியப்பட்டு, அவை சேர்க்க உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்தது.
உணவுப் பொருட்களின் தரம் குறித்து அறிய அவ்வப்போது ஹோட்டல்கள், உணவகங்களில் உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
இதற்கிடையே தீபாவளி பண்டிகை வந்தது. பண்டிகைக்காக வீடுகளிலேயே தின்பண்டங்கள் தயாரிப்பது வெகுவாக குறைந்துவிட்டது.
கடைகளில் தின்பண்டங்களை வாங்குவதை பெரும்பாலானோர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இவர்களை குறிவைத்து, பண்டிகை காலத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து, குடகுக்கு பெருமளவில் தின்பண்டங்கள் விற்பனைக்கு வந்தன.
இவற்றில் அபாயமான செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடகின் பல இடங்களில் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டுத் துறை வெளியிட்ட அறிக்கை:
கேரளாவில் இருந்து, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இனிப்புகள், சிப்ஸ், கார மிக்சர், ஹல்வா, முறுக்கு, உலர்ந்த பழங்கள் என, பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
இவற்றில் அபாயகரமான செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலவிதமான தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்து, கர்நாடக உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை, ஆய்வகத்துக்கு அனுப்பியது.
செயற்கை நிறமூட்டிகள்
ஆய்வில் பெரும்பாலான தின்பண்டங்களில், அலுரா ரெட், சன்செட் எல்லோ, டார்டஜெயின் உட்பட, பல்வேறு செயற்கை நிறமூட்டிகள் சேர்த்திருப்பது தெரிய வந்தது.
பல விதமான தின்பண்டங்களின் பொட்டலங்களின் மீது, தயாரிப்பு தேதி, தயாரித்தவரின் பெயர் என, எந்த விபரங்களும் இல்லை.
தீபாவளி பண்டிகை நேரத்தில், கேரளாவில் இருந்து அதிகமான இனிப்பு தின்பண்டங்கள், கர்நாடகாவில் விற்கப்பட்டன. 151 இனிப்புகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் 31 தின்பண்டங்களில் செயற்கையான நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டது, ஆய்வில் தெரிய வந்தன.
சுவையை அதிகரிக்கவும், கவர்ச்சிகரமாக தென்படவும், ஹார்பிக் மற்றும் யூரியாவுக்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களை தின்பண்டங்களில் சேர்க்கின்றனர். இத்தகைய அபாயமான பொருட்களை தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.