'கார்கேவுக்கு வயதாகி விட்டது': விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
'கார்கேவுக்கு வயதாகி விட்டது': விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
ADDED : டிச 16, 2025 12:11 AM

புதுடில்லி: 'காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயதாகி விட்டது. கட்சி தலைமை பொறுப்பை இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டும்' என வலியுறுத்தி, அக்கட்சியின் பார்லி., குழு தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதிய, ஒடிஷாவைச் சேர்ந்த காங்., நிர்வாகி முகமது மொகிம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஒடிஷாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பராபதி- - கட்டாக் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக, 2019 - 24 வரை பதவி வகித்தவர் முகமது மொகிம், 60. காங்கிரசைச் சேர்ந்த இவர், சமீபத்தில், கட்சியின் பார்லி., குழு தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்.
அதில், 'கட்சியின் தேசிய தலைவர் கார்கேவுக்கு வயதாகி விட்டது. எதிர்க்கட்சி என்ற முறையில் நாம் மிகவும் சுறுசுறுப்பாகவும், விவேகமாகவும் செயல்பட வேண்டும். ஆனால், வயது மூப்பால் கார்கேவால் வேகமாக செயல்பட முடியவில்லை. எனவே, கட்சி தலைமைப் பொறுப்பை இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒடிஷா காங்., தலைவர் பக்தா சரண் தாஸ் கட்சியை சீர்குலைத்து வருகிறார். அவரையும் மாற்ற வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். இது, தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, ஒடிஷா காங்., நிர்வாகி முகமது மொகிமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அக்கட்சி தலைமை நேற்று உத்தரவிட்டுள்ளது.
முகமது மொகிம் கூறுகையில், ''கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் மனதில் பட்டதை கூறினேன். கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அடுத்தடுத்து தேர்தல்களில் தோற்றுக் கொண்டே இருக்கிறோம். கட்சியை மறுசீரமைக்க வேண்டும்,'' என்றார்.

