ADDED : மார் 14, 2024 10:15 PM

பல்லாரி,- ''லோக்சபா சீட் பெற்றதன் மூலம், அஞ்ஞாத வாசத்தில் இருந்து வெளியில் வந்துள்ளேன், என பல்லாரி பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
பல்லாரியில் தன் இல்லத்தில், நேற்று அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் தோற்ற பின், என்னை அஞ்ஞாத வாசத்துக்கு அனுப்பியதை போன்று உணர்ந்தேன். இப்போது லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதியில் எனக்கு பா.ஜ., சீட் அளித்ததன் மூலம், அஞ்ஞான வாசத்தில் இருந்து வெளியே வந்துள்ளேன்.
கடந்த 30 - 40 ஆண்டுகளாக, மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். இதை கவனித்து பா.ஜ., மேலிடம், எனக்கு லோக்சபா சீட் கொடுத்துள்ளது. அஞ்ஞாத வாசத்தில் இருந்து விடுபட்டுள்ளேன்.
என்னிடம் எதுவுமே இல்லாத நேரத்தில், முன்னாள் எம்.பி., பசவ ராஜேஸ்வரி, என்னை நகராட்சி உறுப்பினராக்கினார். அன்று முதல் மக்களுக்காக பணியாற்றுகிறேன். இது ஸ்ரீ ரக்ஷையாக என்னை காப்பாற்றுகிறது.
இம்முறை லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார்.
இது ஸ்ரீராமுலு தேர்தல் அல்ல. இந்தியாவின் தேர்தல். நாட்டின் ஒவ்வொருவரும், நமது தேர்தல் என கருதி, பா.ஜ.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் மக்கள் ஓட்டு போடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

