ADDED : பிப் 26, 2024 11:49 PM

புதுடில்லி: ரஷ்ய ராணுவத்தில் இந்தியாவைச் சேர்ந்த பலர் உதவிப் பணியாளர்களாக பணியாற்றி வருவதாகவும், ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து உக்ரைன் எல்லையில் அவர்கள் போரில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
ரஷ்ய ராணுவத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றும்படி, நம் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக, ரஷ்ய அரசுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக, நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கடந்த வாரம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, மாஸ்கோவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். புதுடில்லியில் உள்ள ரஷ்ய துாதரக அதிகாரிகளிடம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, ரஷ்ய ராணுவத்தில் உதவிப் பணியாளர்களாக பணியாற்றி வந்த இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதாக நம் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ராணுவத்துடன் இணைந்து உக்ரைன் போரில் உதவி புரிய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளராக பணியாற்றி வந்த, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஹெமில் மங்குஹியா என்பவர், ஏவுகணை தாக்குதலில் பலியானதாக நேற்று தகவல் வெளியானது.

