ADDED : நவ 24, 2024 01:01 AM
புதுடில்லி: மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு வந்த பிரதமர் மோடி, 'வளர்ச்சி வென்றதாகவும், அரசியல் பொய்கள் தோற்றதாகவும்' கூறினார்.
கட்சி நிர்வாகிகளிடையே பிரதமர் மோடி பேசியதாவது:
நடந்து முடிந்த மஹாராஷ்டிர தேர்தல் மற்றும் பல மாநில இடைத்தேர்தல்களில் பிரிவினைவாத சக்திகள், எதிர்மறை அரசியல், வாரிசு அரசியல் ஆகியவை தோற்கடிக்கப்பட்டு உள்ளன. மஹாராஷ்டிர மக்கள் நிலையான அரசுக்காக ஓட்டளித்துள்ளனர். அதற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
'ஒற்றுமையாக இருப்பது பாதுகாப்பானது' என்ற முழக்கத்தை மஹாராஷ்டிர தேர்தல் முடிவு அங்கீகரித்துள்ளது.
இது மஹாராஷ்டிராவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய மஹா மந்திரம். நாட்டை ஜாதி, மத ரீதியாக பிரிக்க முயன்றவர்களை மக்கள் தண்டித்துள்ளனர்.
காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் அரசியலமைப்பின் பெயரில் பொய்களை பரப்பினர்.
பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை சிறு சிறு குழுக்களாக பிரிக்க பார்த்தனர். அவர்கள் முகத்தில் அறைந்தது போல், மக்கள் நமக்கு வெற்றியை தந்துள்ளனர்.
அத்துடன் கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல் மாநிலங்களில் காங்கிரஸ் தந்த பொய் வாக்குறுதிகளை மஹாராஷ்டிர வாக்காளர்கள் ஆராய்ந்து பார்த்துள்ளனர். இதனால்தான் அவர்களின் பொய்யும், வஞ்சகமும் எடுபடவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

