ADDED : செப் 21, 2024 10:59 PM
மங்களூரு: தட்சிணகன்னடா, பன்ட்வாலின் கன்யானா கிராமத்தைச் சேர்ந்தவர் ஐதப்பா நாயக், 45. இவரது தம்பி பாளப்பா நாயக், 35. சகோதரர்களுக்குள் சொத்து தகராறு இருந்தது. அவ்வப்போது சண்டையும் நடந்தது.
கன்யானா கிராமத்தின், நந்தர பெட்டுவில் உள்ள பாளப்பா நாயக்கின் சித்தப்பாவின் வீட்டில், 2022 மே 10ல் பூஜை நடந்தது. இதற்காக, பாளப்பா நாயக் வந்திருந்தார்.
இந்த வீட்டின் அருகிலேயே ஐதப்பா நாயக், தன் குடும்பத்துடன் வசிக்கிறார். சொத்து விஷயமாக பேச, இவரது வீட்டுக்கு தம்பி பாளப்பா நாயக் சென்றார்.
இருவருக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த ஐதப்பா நாயக், மரக்கட்டையால் பாளப்பா நாயக்கை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விட்லா போலீசார் விசாரித்து, ஐதப்பா நாயக்கை கைது செய்தனர். விசாரணை முடித்து, மங்களூரின் நான்காவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஐதப்பா நாயக் குற்றம் உறுதியானதால், இவருக்கு ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சுனிதா, நேற்று தீர்ப்பளித்தார்.
'அபராதத் தொகையை செலுத்த தவறினால், மூன்று மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அபராத தொகையில் 10,000 ரூபாயை அரசுக்கும், மீதித் தொகையை கொலையான பாளப்பா நாயக்கின் தாய்க்கும் வழங்க வேண்டும்' என, தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.