சித்து மீதான புகாரால் உயிருக்கு ஆபத்து: பிரதமருக்கு சிநேகமயி கிருஷ்ணா கடிதம்
சித்து மீதான புகாரால் உயிருக்கு ஆபத்து: பிரதமருக்கு சிநேகமயி கிருஷ்ணா கடிதம்
ADDED : டிச 27, 2024 11:38 PM

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது ஊழல் புகார் அளித்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, தனக்கும், குடும்பத்தினருக்கும் மத்திய அரசிடம் பாதுகாப்பு கோரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
வழக்கு பதிவு
மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா என்பவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதம்:
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், முதல்வர் சித்தராமையா, தன் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக நான் அளித்த புகாரின் அடிப்படையில், சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த ஊழலை அம்பலப்படுத்தியதில் இருந்து, என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சிறையில் அடைக்க முயற்சிகள் நடக்கின்றன.
நஞ்சன்கூடு, தேவராஜா போலீஸ் ஸ்டேஷன்களில் என் மீது வழக்கு பதிவாகி உள்ளது. சித்தராமையா மீதான வழக்கை திரும்ப பெறும்படி எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இதையும் மீறி போராட்டத்தை தொடர்வதால், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வருகின்றன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி, ஆக., 18ல் மைசூரு போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதம் நிராகரிக்கப்பட்டது.
பின், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து, எனக்கு பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி., அலோக் மோகனிடம் மனு கொடுத்தனர். ஆனாலும், எனக்கு பாதுகாப்பு வழங்க அரசு மறுக்கிறது.
நடவடிக்கை
பதவியில் இருக்கும் முதல்வர், செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக நான் போராடி வருவதால், மாநில அரசு எனக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கிறது.
எனவே, எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

