ADDED : ஜன 08, 2024 10:58 PM
பெங்களூரு: கோடரியால் வெட்டி, தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பாகல்கோட் பாதாமி கயாத் கிராமத்தில் வசித்தவர் சங்கப்பா பதேசப்பா, 65. இவரது மகன் பதேரப்பா, 40. கடந்த 2016 ஆண்டு ஜூன் 5ம் தேதி தனக்கு உரிய சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி, தந்தையிடம் மகன் கேட்டார்.
சங்கப்பா மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் சங்கப்பாவை கோடரியால் வெட்டி, பதேரப்பா கொலை செய்தார்.
அவரை பாதாமி போலீசார் கைது செய்தனர். பாகல்கோட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2022 நவம்பர் 9ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
பதேரப்பாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதேரப்பா மேல்முறையீடு செய்தார்.
மனுவை நீதிபதிகள் சந்தேஷ், ராமசந்திரா ஹுட்டார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
'தந்தையை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும், சொத்தை பிரித்து தராததால் கோபத்தில் எதிர்பாராதவிதமாக கொலை நடந்தததாகவும் மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், உடலின் முக்கியமான மூன்று பாகங்களில் மனுதாரர், வெட்டி உள்ளார்.
'குடும்பத்தினர் தடுக்க முயன்றபோதும், கொலை செய்யும் நோக்கில், கோடரியால் வெட்டி உள்ளார். இந்த கொலையை எதிர்பாராதவிதமாக நடந்தது என்று கூற முடியாது.
'மனுதாரருக்கு கீழமை நீதிமன்றத்தில் விதித்த தண்டனையை உறுதி செய்கிறோம்' என்றனர்.