முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு ஆயுள்; 33 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு ஆயுள்; 33 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
ADDED : மார் 14, 2024 06:38 AM
வாரணாசி : உத்தர பிரதேசத்தில் தாதாவாக இருந்து எம்.எல்.ஏ.,வான முக்தர் அன்சாரிக்கு எதிரான போலி துப்பாக்கி லைசென்ஸ் வழக்கில், ஆயுள் தண்டனை விதித்து வாராணாசி சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
உத்தர பிரதேச மாநிலம் மவ் சட்டசபை தொகுதியில் 2022 வரை தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் முக்தர் அன்சாரி, 60. இரண்டு முறை பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
தாதாவான இவர் மீது உத்தர பிரதேசம், பஞ்சாப், புதுடில்லி மற்றும் பிற மாநிலங்களில் 60 வழக்குகள் உள்ளன. அதில் ஏழு வழக்குகளில் குற்றவாளி என தண்டிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு எதிரான போலி துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற வழக்கு, வாரணாசியில் உள்ள எம்.பி., --- எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அன்சாரி தன் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் பெற 1987ல் காசிப்பூர் கலெக்டரை அணுகினார்.
பின் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி., கையெழுத்தை மோசடியாக அவரே போட்டு லைசென்ஸ் பெற்றார்.
இந்த மோசடி வெளியே தெரிந்ததும், அன்சாரி மற்றும் மாவட்ட துணை கலெக்டர் உட்பட ஐந்து பேருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி., 1990 டிசம்பரில் வழக்கு பதிந்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் வாரணாசி நீதிமன்றம், போலி துப்பாக்கி லைசென்ஸ் வழக்கில் முக்தார் அன்சாரியை குற்றவாளி என அறிவித்து, ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது தீர்ப்பளித்துள்ளது.

