மதுபான ஊழல்: மாஜி முதல்வரின் இடத்தில் ரூ.11 கோடி பறிமுதல்
மதுபான ஊழல்: மாஜி முதல்வரின் இடத்தில் ரூ.11 கோடி பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2025 12:26 AM

ஹைதராபாத்: ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்து, 11 கோடி ரூபாயை சிறப்பு புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு, 2019 - 24 வரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடந்தது.
அப்போது, மதுபான விற்பனையில், 3,500 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
புதிய ஆட்சி அமைந்ததும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஆந்திர சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை தனியாக விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாதந்தோறும் 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.
மதுபான ஊழல் வழக்கில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தனஞ்செயன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், ஜெகன் கட்சியைச் சேர்ந்த வருண் புருஷோத்தமன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு சொந்தமான பண்ணை வீட்டில், சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு, கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'வருண் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
'இந்த விவகாரத்தில், தொடர்புடைய உயர் மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவர்' என, தெரிவித்தனர்.
இருப்பினும், 'இந்த விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கும், மதுபான ஊழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டே எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்' என, அக்கட்சியின் எம்.பி-., சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

