ADDED : ஜன 10, 2025 11:20 PM
புதுடில்லி:இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது.
டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ., கடந்த 4ம் தேதி வெளியிட்டது.
வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய, மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட மத்திய தேர்தல் குழு, கட்சி தலைமை அலுவலத்தில் நேற்று மாலை ஆலோசனை நடத்தியது.
அப்போது அங்கு கூடியிருந்த நிருபர்களுக்கு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளும் பா.ஜ.,விடமே உள்ளன. ஆனால், 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது.