டில்லி தஸ்த்கர் நேச்சர் பஜாரில் விழாக்கள் பட்டியல் வௌியீடு
டில்லி தஸ்த்கர் நேச்சர் பஜாரில் விழாக்கள் பட்டியல் வௌியீடு
ADDED : ஜூன் 26, 2025 09:45 PM
புதுடில்லி:டில்லி சுற்றுலா வளர்ச்சி வாரியம், 2025 - 26ம் ஆண்டிற்கான பண்டிகைகள் மற்றும் விசேஷ கால பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி, நேற்று முன்தினம் வெளியான தஸ்த்கர் நேச்சர் பஜாரில், பருவமழை தொடர்பான மேளா, ஆகஸ்ட் 7ல் துவங்கி, 18ம் தேதி முடிவடைகிறது.
நாட்டின் அனைத்து கைவினை கலைகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில், ஆண்டுதோறும் தஸ்த்கர் நேச்சர் பஜார் என்ற பெயரில், டில்லியில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில், நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள உணவுகளை கொண்டாடும் வகையில், உணவுத்திருவிழாவும் நடக்க உள்ளது.
அந்தேரியா மோத் என்ற இடத்தில் உள்ள கிசான் ஹாட் பகுதியில், ஆகஸ்ட் 7ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை 'மான்சூன் மேளா' என்ற பெயரில் பருவமழை திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.
தீபங்களின் திருவிழா என்ற பெயரில், அக்டோபரில் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதத்தில், கிரேட் ஹாண்ட்லுார் பஜார், டிசம்பரில் வின்டர் மேளா நடக்கிறது. கிரேட் ஹாண்ட்லுாம் பஜார் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து, கைவினைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி பொருட்கள் விலை குறைவாக விற்கப்படும். தங்களுக்கு பிடித்தமான ரகத்தில், பிடித்த விலையில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் தஸ்த்கர் நேச்சர் பஜாரின் நிரந்தர மைதானத்தில் நடக்க உள்ளன.
இந்த மேளாவில் கைவினைக்கலைஞர்களின் கைவண்ணம், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மற்றும் அந்த பகுதியின் சிறந்த பொருட்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன. அவற்றை அங்கே வாங்கிக் கொள்ளவும் முடியும்.