டிரம்ப் வரி விதிப்பால் பாதிக்கப்படும் துறைகள் பட்டியல்: சலுகை அளித்து பாதுகாக்க மத்திய அரசு தீவிரம்
டிரம்ப் வரி விதிப்பால் பாதிக்கப்படும் துறைகள் பட்டியல்: சலுகை அளித்து பாதுகாக்க மத்திய அரசு தீவிரம்
ADDED : ஆக 26, 2025 08:46 PM

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பின் காரணமாக, எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக வரி 25 சதவீதம், அபராத வரி 25 சதவீதம் என 50 சதவீதம் வரி விதிப்பை இந்தியா மீது, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
அவரது இந்த 50 சதவீதம் வரி விதிப்பு, ஆக.,27 முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் எந்தெந்த தொழில் துறைக்கு எத்தனை சதவீதம் வரி விதிப்பு, அதனால் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், ஆர்கானிக் கெமிக்கல், இறால், கைவினைப்பொருட்கள், கார்ப்பெட், பர்னிச்சர், மெத்தைகள், வைரம், தங்க நகைகள், மெஷினரி, மெக்கானிக்கல் அப்ளையன்சஸ், வேளாண் உற்பத்திப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்டீல், அலுமினியம், காப்பர், லெதர், காலணிகள் ஆகியவை 50 சதவீதம் வரி விதிப்பின் கீழ் வருகிறது. இந்த துறையினருக்கு பாதிப்பு ஏற்படும்.
வாகனங்கள், உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பில் வருகிறது.
மருந்துப்பொருட்கள், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள் ஆகியவை வரியற்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் 50 சதவீதம் வரி விதிப்பின் கீழ் வரக்கூடிய தொழில் துறைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு கணித்துள்ளது.
அத்தகைய துறையினருக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அதிபர் டிரம்ப் கடைசி நேரத்தில் வரி விதிப்பை நிறுத்தி வைக்கவும் வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன.